.webp)

COLOMBO (News 1st) தெற்கு ஆழ்கடலில் கைப்பற்றப்பட்டு, திக்கோவிட்ட துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்ட பலநாள் மீன்பிடிப்படகிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருள் 300 கோடி ரூபா பெறுமதியானதென மதிப்பிடப்பட்டுள்ளது.
படகில் இருந்து 185 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைபொருட்கள் மீட்கப்பட்டன.
கடற்படையினர் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது கடந்த முதலாம் திகதி குறித்த பலநாள் மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டது.
திக்கோவிட்ட துறைமுகத்துக்கு இன்று (05) அதிகாலை கொண்டுவரப்பட்ட படகிலிருந்த 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
படகில் இருந்து 52 ஹெரோயின் பொதிகளும், 100 ஐஸ் போதைப்பொருள் அடங்கிய பொதிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அத்துடன் படகின் உரிமையாளர் கந்தர பிரதேசத்தில் வைத்து இன்று (05) முற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த பலநாள் மீன்பிடிப்படகு கடந்த மாதம் 18 ஆம் திகதி கடலுக்கு சென்றுள்ளதுடன் ஆழ்கடலில் வைத்து போதைப்பொருட்கள் ஏற்றப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
இதேவேளை கடற்படையினர் கடந்த சில நாட்களாக தெற்கு கடற்பரப்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தனர்
இதன்போது போதைப்பொருட்களை கடத்திச் சென்ற படகுகளுடன், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 24ஆம் திகதி மாத்தறை, தலல்ல, நாஒட்டுன்ன கடற்பரப்பில், 21 பொதிகள் மற்றும் பயணப் பொதிகளில் காணப்பட்ட 561 கிலோ 705 கிராம் ஐஸ், ஹெரோயின் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டன.
அதன் பெறுமதி 11.8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.
இதனுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் கந்தர பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.
இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 109 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவிக்கிறது.
கடலோரப் பாதுகாப்புத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களில் 2641 கிலோ 403 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 1944 கிலோ 257 கிராம் ஹெரோயினும் அடங்குகின்றன.
2025 ஒக்டோபர் 14 ஆம் திகதி தங்காலை கடற்பரப்பில் மீட்கப்பட்ட 856 கிலோகிராம் போதைப்பொருள் தொகையானது, நாட்டின் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட மிகப்பாரிய போதைப்பொருள் தொகையாகும்.
2025 செப்டம்பர் 22 ஆம் திகதி தங்காலை - சீனிமோதரவில் கைப்பற்றப்பட்ட 705 கிலோகிராம் போதைப்பொருளானது, தரையிரக்கப்பட்டப்போது ஒரே நாளில் மீட்கப்பட்ட மிகப்பாரிய போதைப்பொருள் தொகையாக பதிவாகியுள்ளது.
இதன் பெறுமதி சுமார் 10 பில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்தனர்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 28 வரையான காலப்பகுதியில் 1315 கிலோ 151 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் மீட்கப்பட்ட ஐஸ் போதைப்பொருளின் அளவு 1615 கிலோ 256 கிராம் ஆகும்.
இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் மூலம் 6816 கிலோ 865 கிராம் கஞ்சாவும், 270 கிலோ 173 கிராம் கொக்கெய்னும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
