ஈரானுடனான போரே தோல்விக்கு காரணம் - ஜே.டி.வேன்ஸ்

இடைத்தேர்தலில் குடியரசுக்கட்சி சந்தித்த பெரும் தோல்விக்கு ஈரானுடனான போரே காரணம் - அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ்

by Staff Writer 05-11-2026 | 12:20 PM

COLOMBO (News 1st) இடைத்தேர்தலில் குடியரசுக்கட்சி சந்தித்த பெரும் தோல்விக்கு ஈரானுடனான போரே காரணம் என அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வேன்ஸ் பகிரங்கமாக கூறியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் - வேன்ஸ் கூட்டணிக்கு வாக்களித்த பல வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சிக்கு மாறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போர், அதனால் ஏற்பட்ட கடுமையான விலை உயர்வு மற்றும் இஸ்ரேலுடனான தற்போதைய அமெரிக்காவின் உறவு ஆகியவையே இதற்கு காரணம் என தேர்தல் கணிப்பாளர் ஒருவரை மேற்கோள்காட்டி துணை ஜனாதிபதி விளக்கியுள்ளார்.

துணை ஜனாதிபதியின் கருத்துகளை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் ஏற்றுக்கொண்டதுடன், போரினால் குறுகிய காலத்திற்கு எரிபொருள் விலை அதிகரித்தமை தங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தேர்தல் பிரசாரங்களின் போது தமக்கு கிடைத்த மக்கள் அன்பு, தேர்தலில் வாக்குகளாக கிடைக்கவில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நீண்ட கால அடிப்படையில் ஈரான் அணுவாயுதம் பெறுவதைத் தடுக்க இந்தப்போர் அவசியமானது என ட்ரம்ப் நியாயப்படுத்தியுள்ளார்.

இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையை உறுதிசெய்துள்ள போதிலும், அலஸ்கா, மிசிசிப்பி, கலிபோர்னியா, வொஷிங்டன், மைன் மற்றும் அரிசோனா உள்ளிட்ட பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேவேளை இடைத்தேர்தலின் முடிவுகளை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை வெகுவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று காலை 06 மணியளவில் பிரித்தானியாவின் ப்ரெண்ட் சந்தையில் மசகு எண்ணெயின் விலை 8 வீதத்தினால் வீழ்ச்சியடைந்து 94.62 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

அமெரிக்காவின் WTI சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 88 டொலராக காணப்படுகின்றது.