.webp)
-561289.jpg)
COLOMBO (News 1st) 4ஆவது முறையாக பிரேசிலின் ஜனாதிபதியாக லூலா டி சில்வா இன்று (26) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1988ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் தோல்வியடைந்த வேட்பாளர் ஒருவர் 2ஆவது சுற்றில் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரேசில் நாட்டின் தேர்தல் ஆணைக்குழுவின்படி பதிவான வாக்குகளில் 51.75 சதவீதத்தை லூலா வென்றுள்ள நிலையில், எதிரணி வேட்பாளர் ஃபிளாவியோ போல்சொனாரோ 48 சதவீத வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ளார்.
7முறை ஜனாதிபதி பதவிக்காக போட்டியிட்டுள்ள லூலா டி சில்வா, இதற்கு முன்னர் 2002, 2006 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளிலும் நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மிகவும் தீர்க்கமானதாக அமைந்த இம்முறை பிரேசில் ஜனாதிபதி தேர்தலின் முதல் கட்டம் கடந்த அக்டோபர் 4ஆம் திகதி நடைபெற்ற போதிலும் அதில் பிரதான வேட்பாளர்கள் இருவருமே 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்கு சதவீதத்தை வெல்ல தவறியிருந்தனர்.
ஃபிளாவியோ போல்சொனாரோ அதில் 47 % வாக்கு சதவீதத்தை வென்றதுடன் லூலா டி சில்வா 45 % வாக்கு சதவீதத்தைப் பெற்றிருந்தார்.
ஃபிளாவியோ என்பவர் அரசுக்கு எதிராகச் சதி செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெயர் போல்சொனாரோவின் மகனாவார்.
45வயதான அவர் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியது போல்சொனாரோ குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அந்த நிர்வாகத்தின் அதிகாரிகள் மீது பலத்த ஊழல் மற்றும் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளும், அதிகாரத் துஷ்பிரயோகம் குறித்த குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ள பின்னணியிலாகும்.
அவரது போட்டியாளரான 80வயதுடைய லூலா டி சில்வாவும் ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகிச் சிறையில் அடைக்கப்பட்டவராவார்.
எவ்வாறாயினும், 2021 ஆம் ஆண்டில் அந்தத் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டன.
நிலவிய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, நேற்றைய தினம் நாடு முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளை மேலதிகமாக 2 மணித்தியாலங்கள் திறந்திருக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
