.webp)
-561296.jpg)
COLOMBO (News 1st) வங்காள விரிகுடாவின் கிழக்கு, மத்திய மற்றும் தென்கிழக்கு கடற்பரப்புகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம், தற்போது ஆழ்ந்த தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இதனால் நாட்டின் பல பகுதிகளில் நிலவும் மழைடனான வானிலை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் தென் மாகாணங்களுக்கும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழமுக்கம், இன்று (26) புயலாக வலுவடையக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு, மேல், சப்ரகமுவ, தென், வடமேல், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளின் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் நிலவுவதாகவும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று (25) காலை 8.30 மணிமுதல் இன்று (26) அதிகாலை 3.00 மணி வரையான காலப்பகுதிக்குள் கிளிநொச்சி - பூநகரி பகுதியில் அதிக்கூடிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அங்கு 163 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் மன்னார் மாவட்டத்தின் இலுப்பை கடவை பகுதியில் 148 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்தின் தொல்புரம் பகுதியில் 110 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அத்துடன் மீசாலையில் 101 மில்லிமீற்றர் அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலையினால் களு கங்கையின் நீர்மட்டம் மில்லகந்த மற்றும் மகுர ஆகிய பகுதிகளில் எச்சரிக்கை மட்டத்திலுள்ளதாக ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலையினால் 5 மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
