.webp)
-561264.jpg)
COLOMBO (News 1st) மேல், சப்ரகமுவ, தென், வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வடக்கு அந்தமான் தீவுகளை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பரப்பில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்த பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுவடைந்துள்ளது.
இந்த தொகுதியானது இன்று (25) வங்காள விரிகுடாவின் கிழக்கு - மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்குப் பகுதியினூடாக நகர்ந்து ஆழமான தாழமுக்கமாக வலுவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதற்கமைய, நாளை (26) இது புயலாகவும், 27ஆம் திகதி காலை வங்காள விரிகுடாவின் மேற்கு - மத்திய கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் இது பாரிய புயலாகவும் மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.
இதனால் இலங்கைக்கு நேரடித் தாக்கம் இல்லை என்ற போதிலும், காற்றின் போக்கு நாட்டை ஊடறுத்து பரவுவதன் காரணமாக தென்மேற்குப் பகுதிகளில் மழைவீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது
இதனிடையே, வங்காள விரிகுடாவின் ஆழமான கடற்பரப்புகளில் பயணிக்கும் பலநாள் கடற்றொழில் படகுகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும் வரை கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
அத்துடன், குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சமூகத்தினரையும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த எச்சரிக்கையானது வட அகலாங்கு 10 முதல் 20 வரையும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 95 வரையான கடற்பரப்புகளுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதலாம்கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, ஈரவலயத்தில் உள்ள ஆறுகளை அண்டிய தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
திணைக்களத்தின் நீர்வள முகாமைத்துவ பணிப்பாளர், பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார இது தொடர்பில் தெரிவிக்கையில், நில்வளா, களனி, களு கங்கை மற்றும் அத்தனகலு ஓயா, மகா ஓயா ஆகியவற்றை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இதனிடையே, சீரற்ற வானிலை காரணமாக 21 மாவட்டங்களைச் சேர்ந்த 10, 311 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவுகள், நீரில் மூழ்குதல் மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற அனர்த்தங்களே இதற்கு காரணம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மேலும், 23 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் பாதுகாப்பான நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவசர அனர்த்த நிலைமைகளின் போது, 117 என்ற துரித அழைப்பு இலக்கத்தினூடாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு நேரடியாக அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
