.webp)
-561235.jpg)
Colombo (News1st) மலையக ரயில் மார்க்கத்தின் கடிகமுவ ரயில் நிலையத்திற்கு அருகில், ரயில் பாதையில் சரிந்து வீழ்ந்துள்ள மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ரயில் மார்க்கத்திற்கு அருகிலுள்ள ரயில்வே பாதுகாப்புப் பகுதிக்கு வெளியே உள்ள மண்மேட்டில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, கடந்த பல நாட்களாக இவ்வாறு ரயில் பாதையில் மண் சரிந்து வீழ்வதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
ரயில் மற்றும் ட்ரக் வண்டிகளைப் பயன்படுத்தி குறித்த மண்ணை அகற்றும் பணிகள் இன்று (24) காலை ஆரம்பிக்கப்பட்டன.
அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மண்சரிவு அபாயம் தீவிரமடைந்துள்ளதுடன், அதனை சீர்செய்வதற்காக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்துடன் இணைந்து தற்போது விசேட வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மண் அகற்றும் பணிகள் காரணமாக, ரம்புக்கனை, பேராதனை மற்றும் கம்பளை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து இன்றும் நாளையும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளி காரணமாக மலையக ரயில் மார்க்கத்தில் 103 இடங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளதுடன், அவற்றில் 36 இடங்கள் மண்சரிவுகளினாலேயே சேதமடைந்துள்ளன.
குறித்த மார்க்கத்தின் பல இடங்கள் துரிதமாக புனரமைக்கப்பட்டு, பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் போக்குவரத்து கடந்த 2 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
