.webp)
-561236.jpg)
Colombo (News1st) சிறையிலுள்ள பிக்குகள் தாம் சார்ந்துள்ள பீடம் அல்லது தரப்பினரைத் தௌிவுபடுத்தி, அவர்களின் துறவற ஆடைகளை அகற்றுவது தொடர்பான கட்டளைகளை உள்ளடக்கும் வகையில் சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நிலையான கட்டளைகளில் திருத்தம் செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நீதியமைச்சரின் அனுமதிக்கமைய பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் பிரசாத் ஹேமந்த குமாரவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
நிலையான கட்டளைகளின் திருத்தங்களுக்கு அமைய பௌத்த பிக்குகள் எவரேனும் கைதியாக சிறையிலடைக்கப்படும் போது, அவர்கள் அதுவரை அணிந்திருந்த துறவற ஆடைகள் அகற்றப்படுவது தொடர்பில் பௌத்த விவகார திணைக்களத்தினூடாக உரிய பீடம் அல்லது தரப்புக்கு அறிவிக்கப்பட வேண்டும் என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரிய பீடம் அல்லது தரப்பினால் துறவற ஆடைகளை அகற்றுவது தொடர்பில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் 10 நாட்களுக்குள் பௌத்த விவகார திணைக்களத்தின் ஊடாக சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் குறித்த திருத்தங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதிக்குள் எந்தவொரு பதிலும் கிடைக்காவிட்டால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உரிய விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறையிலடைக்கப்படும் பிக்கு ஒருவர் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் சந்தர்ப்பத்தில், அவர் சிறையில் அடைக்கப்பட்ட போது அணிந்திருந்த துறவற ஆடையை அவ்வாறே தொடர்ந்தும் அணிந்திருக்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.
எவ்வாறாயினும் உரிய பீடம் அல்லது தரப்பினால் அவ்வாறு துறவற ஆடைகளை அணிந்திருக்க அனுமதி வழங்கப்பட்டிருக்காவிட்டால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் உரிய கட்டளைகளுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வர்த்தமானியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பீடம் அல்லது தரப்பிடமிருந்து பெறப்பட வேண்டிய அனுமதிக்காக, பிக்கு சிறையிலடைக்கப்பட்ட நாள் முதல் 7 வேலை நாட்களுக்குள் பௌத்த விவகார திணைக்களத்துக்கு அது தொடர்பில் அறிவிக்கப்பட வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரிதொரு மதத்தைச் சேர்ந்த மத குரு ஒருவர் கைதியாக சிறையில் அடைக்கப்படும் போதும் அல்லது சிறையிலிருந்து விடுவிக்கப்படும் போதும் தேவையான மாற்றங்களுடன் இந்த உத்தரவுகள் அவருக்கும் பொருந்தக்கூடிய வகையில் அமுல்படுத்தப்பட வேண்டும் என குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
