.webp)
-561203.jpg)
Colombo (News 1st) திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலங்களை மீளப்பெற்று திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோரி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சருக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
கடந்த 06ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த சட்டமூலம் வெளியிடப்பட்டது.
திட்டமிட்ட குற்றங்களை ஒடுக்குவதற்கு பயனுள்ள சட்டமியற்றல் அவசியமானது என்பதை ஏற்றுக்கொள்வதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
எனினும், முன்மொழியப்பட்டுள்ள சட்டமூலத்தில் காணப்படும் சில ஏற்பாடுகள் இலங்கையின் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் மற்றும் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனங்களுக்கு முரணாக உள்ளதாக கருதுவதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் பல பிரதான விடயங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் வழங்கும் ஒப்புதல் வாக்குமூலங்களை சாட்சியாக ஏற்றுக்கொள்ளுதல், '
தீவிரமான குற்றங்கள்' என்பது மிகவும் பரந்த அளவில் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளமை, திட்டமிட்ட குற்றக் கும்பல்களின் உறுப்பினர்களை அடையாளம் காண்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைகள், சந்தேகநபர்களுக்கு பிணை வழங்குதல், விளக்கமறியலில் வைத்தல் மற்றும் சந்தேகநபர்களை விடுதலை செய்தல் என்பன தொடர்பில் நீதிமன்றத்திற்குரிய விருப்பு அதிகாரத்தை மட்டுப்படுத்துதல் உள்ளிட்ட பிரதான விடயங்களில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த விடயங்களை கருத்திற்கொண்டு அரசியலமைப்பு ரீதியான பாதுகாப்பு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு முழுமையாக இணங்கும் வரை சம்பந்தப்பட்ட சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறும் அதில் குறிப்பிடத்தக்க திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தின் ஊடாக பரிந்துரைத்துள்ளது.
