.webp)

Colombo (News 1st) அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தாம் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்த மனுவில் தலையீடு செய்து விடயங்களை முன்வைக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
குறித்த இடையீட்டு மனுக்கள் தொடர்பான உத்தரவை இன்று(22) அறிவிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த 14ஆம் திகதி தீர்மானித்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த இடையீட்டு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
பெங்கமுவே நாலக தேரர் உள்ளிட்ட பல பௌத்த பிக்குகள், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சில தன்னார்வ நிறுவனங்கள் குறித்த இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுக்கள் முன்னாள் அரச புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு அமைவாக தாம் கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக தாக்கல் செய்துள்ள எழுத்தாணை மனுவில் தலையிட்டு விடயங்களை முன்வைப்பதற்கு அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
