புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

உள்நாட்டு இறைவரி - கலால்வரி திணைக்களம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

by Staff Writer 22-10-2026 | 8:11 AM

Colombo (News 1st) வரி செலுத்துவதை தவிர்த்தல் மற்றும் நிதி தூய்தாக்கலை தடுத்தல் ஆகிய செயற்பாடுகளுக்காக உள்நாட்டு இறைவரி மற்றும் கலால்வரி திணைக்களங்களுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒருங்கிணைந்த பொறிமுறை ஊடாக புலனாய்வு தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் அதனடிப்படையில் சமாந்தரமான விசாரணைகளை மேற்கொள்வதற்கும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் கலால்வரி திணைக்களம் ஆகியன நடவடிக்கை எடுக்கவுள்ளன.

பிரதி திறைசேரி செயலாளர் ஏ.என்.ஹபுகலவின் தலைமையில் நேற்று(21) நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் ருக்தேவி பெர்னாண்டோ மற்றும் கலால்வரி ஆணையாளர் நாயகம் எம்.பீ.என்.ஏ.பிரேமரத்ன ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தில், வரி ஏய்ப்புகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் கணக்காய்வு நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், 
வருமான திரட்டல் செயன்முறையை முறைமைப்படுத்துதல், அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வருமான இலக்குகளை அடைதல் உள்ளிட்ட பல பிரதான நோக்கங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையின் ஊடாக அரசாங்கத்தின் வரி வருமானத்தை பாதுகாத்து, நிதி ஒழுக்கம் மற்றும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை மேலும் பலப்படுத்த எதிர்பார்ப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.