.webp)
-561221.jpg)
Colombo (News 1st) நாட்டில் மழையுடனான வானிலை இன்று(22) முதல் மீண்டும் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டை அண்மித்து நிலவிய கீழ் வளிமண்டல தளம்பல் நிலைமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் நாட்டிலும் நாட்டை சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் பலத்த மழை பெய்யுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடக்கு, வடமேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்திலும் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்களால் எற்படும் பாதிப்புகள் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தெதுரு ஓயாவின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் வாரியபொல, நிக்கவரெட்டிய, மஹவ, கொபேகனை, பிங்கிரிய, பல்லம, சிலாபம், ஆராய்ச்சிகட்டுவ, ரஸ்நாயக்கபுர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வௌ்ளம் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் வாழும் மக்களை மிகவும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடனான வானிலையை தொடர்ந்து நாட்டின் பல நீர்தேக்கங்கள் வான்பாய்வதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நதிகள் முகாமைத்துவ பிரிவின் பிரதம பொறியியலாளர் எஸ்.ஜெயன் பார்த்தசாரதி தெரிவித்தார்.
