போதைப்பொருட்களை கடத்த திட்டமிட்ட 4பேர் கைது

இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்த திட்டமிட்டதாக நாகபட்டினத்தில் 4 பேர் கைது

by Staff Writer 17-10-2026 | 9:36 PM

COLOMBO (News 1st) இந்தியாவிலிருந்து இலங்கைக்கு போதைப்பொருட்களை கடத்துவதற்கு திட்டமிட்ட குற்றச்சாட்டில், இந்திய புலனாய்வு பிரிவினரால் நாகபட்டினத்தில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
கைது செய்யப்பட்டவர்களுள் தமிழக ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரொருவரும் உள்ளடங்குவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 
சந்தேகநபர்களிடமிருந்து 100 கிலோகிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக இந்திய புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
நாகபட்டினத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தப்படவுள்ளதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய புலனாய்வு அதிகாரிகள் நேற்று காலை விசேட சுற்றிவளைப்பொன்றினை மேற்கொண்டிருந்தனர். 
நாகபட்டினம் - வேளாங்கண்ணி பகுதியில் சந்தேகநபரொருவரின் வீட்டில் முன்னெடுக்கப்பட்ட சோதனையை தொடர்ந்து, பிரதான சந்தேகநபரான தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். 
42 வயதான பிரதான சந்தேகநபரின் மனைவி இலங்கை பிரஜையென தகவல்கள் வௌியாகியுள்ள நிலையில், புலனாய்வு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 
இதன்போது, கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகை சென்ளையிலிருந்து நாகபட்டினத்திற்கு கடத்தப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்து தமிழ்நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும், இலங்கைக்கும் அதனை கடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வௌியாகியுள்ளன. 
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையின் பெறுமதி 135 கோடி இந்திய ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளது. 
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரை, கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்தும், அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியுள்ளதாக கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர் அறிவித்துள்ளார்.