நாட்டின் பல பகுதிகளில் 100 - 150mm வரை மழை

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி : 100 - 150mm வரை மழை

by Staff Writer 13-10-2026 | 9:02 AM

Colombo (News 1st) தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்தப் பகுதி உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் தாக்கத்தால் இன்று(13) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளிலும் அதனை சூழவுள்ள பகுதிகளிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகன்றது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் முன்னறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு மீனவ, கடல்சார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக திணைக்களம் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் 100 முதல் 150 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் 75 மில்லிமீட்டருக்கு அதிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் பனிமூட்டம் நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலவும் கடும் மழையுடனான வானிலையால் 09 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை, பதுளை, கொழும்பு, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களின் பிரதேச செயலகப் பிரிவுகள் சிலவற்றுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த வருடம் ஏற்பட்ட டித்வா சூறாவளியால் பாதிப்பை எதிர்கொண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், மலையகப் பகுதிகளில் வாகனங்களில் செல்லும் சாரதிகளும் மண்மேடுகளை அண்மித்து வசிப்போரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.