.webp)
Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று(12) நண்பகல் கைது செய்யப்பட்டு, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னரே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது, பொஸ்பேட் இறக்குமதி செய்யும் 03 நிறுவனங்களிடம் 81 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகக் கோரி, தனது செயலாளராக செயற்பட்ட சுமதிபால லியனாராச்சியின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்து, அதனை தனது அரசியல் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலும் 03 இரத்தினக்கல் வர்த்தகர்களிடம் 24 இலட்சம் ரூபாவை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டமை தொடர்பிலும் சந்தேகநபரான பாராளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இலஞ்சம் பெற்ற இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய விடுக்கப்பட்ட அறிவித்தலுக்கு அமைய, சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று முற்பகல் முன்னிலையானார்.
பல மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
