ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம் நிறைவேற்றம்

ஊழல் எதிர்ப்பு திருத்த சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றம்

by Staff Writer 08-10-2026 | 6:47 PM

Colombo (News 1st) ஊழல் எதிர்பு திருத்தச் சட்டமூம் திருத்தங்களுடன் இன்று(08) பிற்பகல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான பாராளுமன்ற விவாதம் இன்று நண்பகல் ஆரம்பமானது.

ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்பிற்கு முரணானவை என உயர் நீதிமன்றம் அண்மையில் தீர்மானித்திருந்தது.

இதற்கமைய சட்டமூலத்தின் 6 (7)ஆவது சரத்து அரசியலமைப்பிற்கு முரணானது என்பதால் அதனை நிறைவேற்றுவதற்கு விசேட பெரும்பான்மை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அனுமதிப்பத்திரம் பெற்ற மற்றும் வெகுசன ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்கள், தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளை சமர்ப்பிக்க வேண்டும் என அந்த சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என்பதே உயர் நீதிமன்றத்தின் தீர்மானமாகும்.

இதனிடையே, சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வெளிப்படுத்தலை சமர்ப்பிக்கும் நபருடன் 06 மாதங்களுக்கும் அதிகமாக ஒரே வீட்டில் தங்கியிருக்கும் நபரின் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வெளிப்படுத்தலை பிரசுரிப்பதை நீக்குவதாயின் அதற்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களுக்கு நீதவான் ஒருவரால் பிணை வழங்க முடியாது எனவும் மேல் நீதிமன்றத்தால் பிணை வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள சரத்தை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இந்நிலையில் ஊழல் எதிர்ப்பு திருத்தச் சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.