வண்ணாத்திவில்லு வெடிபொருட்கள் சம்பவத்தின் தீர்ப்பு

வண்ணாத்திவில்லு வெடிபொருட்கள் சம்பவத்தின் 2 குற்றவாளிகளுக்கு 10 வருட கடூழிய சிறை

by Staff Writer 07-10-2026 | 12:22 PM

Colombo (News 1st) 2018ஆம் ஆண்டு புத்தளம் - வண்ணாத்துவில்லு, லெஸ்டோஸ் தோட்டத்தில் சட்டவிரோதமாக வெடிபொருட்களைச் சேகரித்து வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட அபு ஹனீஃபா மொஹமட் முசிப் மற்றும் அமீர் ஹம்சா மொஹமட் ஹமாஸ் ஆகியோருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதிவாதிகள், தடுப்புக்காவல் மற்றும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலத்தை கழித்து குறித்த சிறைத்தண்டனையை அமுல்படுத்துமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

லால் ரணசிங்க பண்டார, ரஷ்மி சிங்கப்புலி மற்றும் நயோமி விக்ரமசேகர ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியது.

2018ஆம் ஆண்டில், வெடிபொருட்களாக கருதப்படும் ஒருதொகை நைட்ரேட், 12 ரவைகள், துப்பாக்கி, வெடிபொருட்களை தயாரிப்பதற்கு தேவையான நைட்ரிஜன் அமிலம், யூரியா ஆகியன புத்தளம் - வண்ணாத்துவில்லு, லெஸ்டோஸ் தோட்டத்திலிருந்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டன.

இந்த சம்பவம் தொடர்பாக அபு ஹனீஃபா மொஹமட் முசிப், அமீர் ஹம்ஸா மொஹமட் ஹமாஸ், மொஹமட் ஷரீஃப் ஆதம் லெப்பை, மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா, முகமது இப்ராஹிம் முகமது நௌபர், மொஹமட் ரமீஷ் மொஹமட் சாஜித் ஆகியோருக்கு எதிராக 14 குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த குற்றச்சாட்டுகளை முதலாவது பிரதிவாதியான அபு ஹனீஃபா மொஹமட் முசிஃப், இரண்டாவது பிரதிவாதியான அமீர் ஹம்ஸா மொஹமட் ஹமாஸ் ஆகிய இருவரும் கடந்த 28ஆம் திகதி நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டனர்.

பிரதிவாதிகள் குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவர்களுக்கான தண்டனைகளை அறிவிப்பதற்காக இன்று(07) வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.