கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில்..

கலகொட அத்தே ஞானசார தேரர் விளக்கமறியலில்..

by Staff Writer 04-10-2026 | 6:04 PM

Colombo (News 1st) பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை நாளை(05) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தேரர் இன்று(04) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தீனியாவல ஆரண்ய சேனாசனய விகாரையில் தலைமறைவாக இருந்த போது கலகொட அத்தே ஞானசார தேரர் நேற்று(03) கைது செய்யப்பட்டார்.

ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு இரண்டு நாட்களுக்குள் பகிரங்க பிடியாணை மற்றும் இரு பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

பகிரங்க பிடியாணையை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு வெளிநாட்டு பயணத்தடையும் விதித்திருந்தது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் கொழும்பு மேல் நீதிமன்ற பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தது.

அத்துடன், 09 மாத சிறைத்தண்டனை தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் மற்றொரு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.