.webp)
-560770.jpg)
COLOMBO (News 1st)
சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைக் குறைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக,ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட நால்வர் அடங்கிய குழுவினர் எதிர்வரும் திங்கட்கிழமை (05) சவுதி அரேபியா நோக்கி புறப்படவுள்ளனர்.
குறித்த குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணிகளான உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் அடங்குகின்றனர்.
இதற்கமைய, குறித்த 2 ஜனாதிபதி சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர், எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமைகளில் சவுதி அரேபியாவிலுள்ள 2 சட்டத்தரணிகள் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
சிவராசா அனோஜனின் தண்டனையைக் குறைப்பது தொடர்பாக, சவுதி அரேபிய உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மாஅதிபர் திணைக்களம் அண்மையில் குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரம் குறித்து, சவுதி அரேபியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக தொடர்ச்சியாக கவனம் செலுத்தப்பட்டு வருவதுடன், அங்குள்ள அதிகாரிகளுடன் இராஜதந்திர ரீதியில் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தது.
சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்ட கருத்திற்கு அமைய, சவூதி அரேபியாவின் அல்-அஹ்சா குற்றவியல் நீதிமன்றம் அனோஜன் சிவராசாவிற்கு ஆரம்பத்தில் 5 வருட சிறைத் தண்டனையும் 3 மில்லியன் சவூதி ரியால் அபராதமும் விதித்திருந்திருந்தது.
பின்னர், இந்தத் தண்டனைக்கு எதிராக அனோஜன் தரப்பினர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்ததுடன், அந்த மேன்முறையீட்டுக்கு எதிராக மற்றுமொரு மனுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்த மேன்முறையீடுகளின் தீர்ப்புக்கு அமையவே அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கல்முனை நற்பிட்டிமுனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன் சுமார் 09 மாதங்களுக்கு முன்னர் தொழில் நிமித்தம் சவூதி அரேபியாவிற்கு சென்றிருந்தார்.
