.webp)
Colombo (News 1st) லலித்குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் நேற்று(29) சாட்சியமளித்தார்.
நிகழ்நிலை ஊடாக சாட்சி விசாரணை நடைபெற்றது.
2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ், குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பாக உறவினர்கள் தாக்கல் செய்த வழக்கிற்கமைய இந்த சாட்சி விசாரணை நடைபெற்றது.
2011 டிசம்பர் 09ஆம் திகதி யாழ்ப்பாணம் - ஆவரங்கால் பகுதியில் சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு காணாமல் போனவர்களின் குடும்ப உறவினர்களுக்காக ஊடக சந்திப்பை நடத்தத் தயாராக இருந்தபோது, வெள்ளை வேனில் வந்த குழுவினர் லலித் மற்றும் குகனை கடத்திச் சென்றிருந்தனர்.
இவர்கள் காணாமலாக்கப்பட்டமை குறித்து அப்போதைய அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடக சந்திப்பொன்றில் கருத்து வௌியிட்ட போது, அவர்கள் உயிருடன் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
அந்த கூற்றை அடிப்படையாகக் கொண்ட விசாரணைகளின் போது அவரிடம் விபரங்கள் கோரப்பட்ட போது, அன்றைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் அறிவித்தலுக்கு அமையவே அந்த கூற்றை வெளியிட்டதாக ரம்புக்வெல்ல கூறியிருந்தார்.
இதற்கமைய, 2019 மார்ச் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையாகி சாட்சியமளிக்குமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு அழைப்பாணை விடுக்கப்பட்டது.
எனினும், பாதுகாப்பு பிரச்சினைகளை காரணம் காட்டி சாட்சியமளிப்பதை தொடர்ச்சியாக தவிர்த்து வந்த கோட்டாபய ராஜபக்ஸ, பின்னர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவானார்.
கடந்த பெப்ரவரி மாதம் 06ஆம் திகதி இந்த வழக்கு யாழ். நீதவான் நீதிமன்றத்தில் அழைக்கப்பட்ட போது, கோட்டாபய ராஜபக்ஸவின் சட்டத்தரணிகள் அவருக்கு நிகழ்நிலை ஊடாக சாட்சியமளிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர்.
அந்த கோரிக்கைக்கு ஜூன் 02ஆம் திகதி நீதிமன்றம் அனுமதி வழங்கியதுடன், அதற்கமையவே நேற்று சாட்சி விசாரணை நடைபெற்றது.
கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்ததுடன், யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இருந்து முறைப்பாட்டாளர்கள் சார்பில் சட்டத்தரணி நுவன் போப்பகேவின் வழிநடத்தலின் கீழ் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.
நீண்ட காலம் கடந்துவிட்டதால் தமக்கு அது தொடர்பான சம்பவங்கள் நினைவில்லை என கோட்டாபய ராஜபக்ஸ சாட்சியமளித்தார்.
அத்துடன், அரசியல் இலாபத்திற்காகவும் நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்காகவே சில தரப்பினர் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்பட்ட சம்பவங்களுடன் இராணுவம் மற்றும் புலனாய்வு பிரிவினருக்கு தொடர்பிருப்பதாக குறிப்பிடுவதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
ஒரு நாட்டின் பொதுமக்கள் காணாமல் போகின்றார்கள் என்றால் அது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
தனிநபர்கள் பல்வேறு காரணங்களுக்காக காணாமல் போகிறார்கள். அப்போது அது குறித்து பொலிஸார் செயற்பாடுவார்கள். காணாமல் போதல் தொடர்பான அனைத்து சம்பவங்களும் பாதுகாப்பு பேரவையில் சமர்ப்பிக்கப்படுவதில்லை. விபரங்கள் கிடைக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. விசேடமான சந்தர்ப்பம் என்றால் விபரங்கள் கிடைத்துள்ளன.
அதனை தொடர்ந்து, மேல் மாகாண முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சாகர சேனாரத்ன கடத்தப்பட்ட சம்பவம் குறித்து சாட்சியமளித்த கோட்டாபய ராஜபக்ஸ, தனக்கு அது குறித்து நினைவில்லை என கூறினார்.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
ஊடகவியலாளர் கீத் நொயாரை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நினைவிருக்கிறது. எனக்கு அந்த சம்பவம் ஓரளவிற்கு நினைவிருக்கிறது. விபரங்கள் நினைவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
ஓரளவிற்கு நினைவிருக்கிறது என்று எதனை கூறுகின்றீர்கள்?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
சம்பவமொன்று நடந்ததென நினைவிருக்கிறது. நான் அதற்கு இன்று தயாராகி வரவில்லை. அதனாலேயே ஓரளவிற்கு நினைவிருக்கிறது என கூறினேன்.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
கீத் நொயார் காணாமல் போனமை உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நீதவான் அவர்களே, நான் அறிந்த வரையில் கீத் நொயார் காணாமல் போகவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
அவரை ஒரு குழுவினர் கடத்திச்சென்று சித்திரவதை செய்ததை நீங்கள் அறிவீர்களா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
அவர் கடத்தப்பட்டாரா என்பது தெரியாது. ஆனால் காணாமல் போய் கண்டறியப்பட்டார் என்று தெரியும்.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
அவர் காணாமல் போயுள்ளார் என்று உங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
15 வருடங்களுக்கு முன்னர் நடந்த விடயம். யார் தொலைபேசியில் பேசினார்கள் என்று இப்போது எனக்கு நினைவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
நீங்கள் அன்றைய பொலிஸ் மாஅதிபர் ஜயந்த விக்ரமரத்னவிற்கு அது குறித்து அறிவித்தது நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நான் அப்படி ஒரு சம்பவத்தை அறிந்திருந்தால், அது குறித்து பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்திருப்பேன்.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
நீங்கள் பாதுகாப்பு செயலாளர். மேஜர் ஜெனரல் ஹெந்தவித்தாரணவிற்கு அது குறித்து அறிவித்தது நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
இது நீண்ட காலத்திற்கு முன்பு நடந்த விடயம். அதனால் எனக்கு இப்போது அது குறித்து நினைவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
கீத் நொயாருக்கு பலத்த காயம் ஏற்படுத்தி, பின்னர் அவரை ஒரு இடத்தில் கைவிட்டுச் சென்றதை நீங்கள் அறிவீர்களா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
எனக்கு நினைவில்லை நீதவான் அவர்களே.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
கீத் நொயாரைக் கடத்திச்சென்று கொலை செய்யாமல் உங்களின் உத்தரவின் பேரில் விடுவித்தார்கள் என நான் கூறுகின்றேன்
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நான் அதனை நிராகரிக்கிறேன் நீதவான் அவர்களே. நான் முதலிலேயே அப்படியொரு சம்பவம் நடந்ததாக கூறினேன். அது எப்படி நடந்தது, யார் செய்தார்கள் என எனக்கு தெரியாது. அதுமட்டுமில்லாமல் 15 வருடங்களுக்கு பின்னர் கேட்டால் எனக்கு நினைவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
2017 ஜனவரி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அறிக்கையொன்றில், நீங்கள் அது தொடர்பாக பிரதி பொலிஸ் மாஅதிபருக்கு அறிவித்துள்ளீர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
அது தொடர்பாக எனக்கு நினைவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
குறித்த சம்பவம் தொடர்பாக இராணுவத் திரிபொலி படைப்பிரிவின் அதிகாரிகள் 05 பேர் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டனர் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
இல்லை நீதவான் அவர்களே, எனக்கு தெரியாது.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
அன்றைய பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில், கடத்தல்கள் மற்றும் காணாமல் ஆக்கப்படுதல் விவகாரங்களில் நீங்கள் நேரடியாகத் தலையிட்டு அறிவுறுத்தல்களை வழங்கினீர்கள் என நான் உங்களிடம் கூறுகின்றேன்
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நான் அதனை நிராகரிக்கிறேன். நான் அத்தகைய எந்த நடவடிக்கையிலும் தொடர்புபடவில்லை. பாதுகாப்பு செயலாளர் என்ற வகையில் எனக்கு இருந்த கடமை, அரசாங்கம் எடுக்கும் கொள்கைகளை அந்தந்த நிறுவனங்களுக்கு அனுப்புவது மட்டுமே. நான் நேரடியாக தரை நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
நபர்களைக் கடத்தும் மற்றும் காணாமலாக்கும் நடவடிக்கை பாதுகாப்பு தரப்புக்களில் இருந்தது என்றா சாட்சியாளர் கூறுகின்றார்
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நீதவான் அவர்களே, நான் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என்றே கூறுகிறேன். நான் ஒரு சிவில் நபராகவே கடமையாற்றினேன். மற்ற விடயங்கள் தொடர்பாக நான் எந்த வகையிலும் அறிவுறுத்தல்களை வழங்கவில்லை. எனக்கு அதற்கு அதிகாரம் இருக்கவுமில்லை.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
நீங்கள் பாதுகாப்பு செயலாளருக்கு மேலதிகமாக 2019-2022 காலப்பகுதியில் நாட்டின் ஜனாதிபதியாகவும் கடமையாற்றினீர்கள் அல்லவா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
ஆம் நீதவான் அவர்களே.
மேற்கோள்
சட்டத்தரணி நுவன் போப்பகே
பாதுகாப்பு செயலாளராகவும் பின்னர் ஜனாதிபதியாகவும் இந்நாட்டின் கடத்தல்கள் மற்றும் காணாமலாக்கப்படுதல் குறித்து உங்களுக்கு புரிதல் இருக்கிறது அல்லவா?
மேற்கோள்
கோட்டாபய ராஜபக்ஸ
நீதவான் அவர்களே, இவை அரசியல் இலாபம் பெறும் நோக்கில் முன்வைக்கப்பட்ட விடயங்களே தவிர, அவற்றில் எந்த உண்மையும் இல்லை. நாட்டின் பெயரைக் கெடுப்பதற்காகவும் அரசியல் இலாபம் பெறும் நோக்கிலுமே அந்த விடயங்களைக் கூறுகிறார்கள்.
சாட்சியப் பதிவு நிறைவடைந்ததுடன், மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதிக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
