.webp)
-560673.jpg)
COLOMBO (News 1st) பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் நேற்று (26) அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக உள்ளக விசாரணை குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் ஐவர் உள்ளடங்குவதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அமைச்சு மட்டத்திலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக 2 பொலிஸ் குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளன்,
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
வெடிப்புச் சம்பவத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்த வைத்தியசாலை ஊழியரொருவர் உயிரிழந்துள்ளதுடன், 6 பேர் காயமடைந்தனர்.
ஹபரணைப் பகுதியைச் சேர்ந்த 36 வயதன ஒருவரே உயிரிழந்தார்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மற்றுமொருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த வெடிப்புச் சம்பவத்தினால் வைத்தியசாலையின் பிரதான சமையலறை மற்றும் அதற்கு அண்மையிலுள்ள பல கட்டடங்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் சிலர் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
எரிவாயுக் குழாயொன்றில் ஏற்பட்ட கசிவே இந்த வெடிப்புச் சம்பவத்திற்கு காரணம் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவை தேசிய சிறுநீரக வைத்தியசாலையின் சமையலறை வளாகத்தில் நேற்று (26) அதிகாலை 4 மணிக்கு இந்த வெடிப்புச் சம்பவம் பதிவாகியிருந்தது.
