நில்வலா, கிங் கங்கைகளின் நீர்மட்டம் உயர்வு : தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம்

by Staff Writer 24-09-2026 | 8:21 AM

Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையினால், நில்வலா மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் சிறு வெள்ள மட்டத்தை அண்மித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பஸ்கொட, கொடபொல, பிட்டபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, கம்புருபிட்டிய, திஹகொட பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும்
தவலம, நாகொட, பத்தேகம, வெலிவிட்டிய - திவித்துர பிரதேச செயலக பிரிவுகளை அண்மித்தும் சிறு வௌ்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, நுவரெலியா மாவட்டத்தின் கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு, நோர்வூட் மற்றும் அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவுகள், 
கண்டி மாவட்டத்தின் பஸ்பாகே கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக 
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கண்டி மாவட்டத்தின் உடபலாத்த, கங்க இஹல கோரளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 

காலி மாவட்டத்தின் நியங்கம, தவலம, நெலுவ மற்றும் நாகொட பிரதேச செயலாளர் பிரிவுகள்,
கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, அரநாயக்க, தெரணியகல, மாவனெல்ல மற்றும் எட்டியாந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுகள்
மாத்தறை மாவட்டத்தின் கொடபொல, பஸ்கொட மற்றும் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுகள் 
இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி பிரதேச செயலாளர் பிரிவிற்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, காலி, கேகாலை, குருணாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டய ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் இன்றும் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் இன்று(24) 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேற்கு - மத்திய மற்றும் அதனை அண்மித்த வடமேற்கு வங்காள விரிகுடாவில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்றிரவு இந்தியாவின் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடற்கரையை அண்மிக்குமென   வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடி தாக்கம் இலங்கைக்கு இல்லை என்ற போதிலும், குறித்த தொகுதியை நோக்கி ஈர்க்கப்படும் காற்றின் காரணமாக நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், மீனவ மற்றும் கடல்சார் ஊழியர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.