மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள்

மின்சார வாகனங்களுக்கு பச்சை நிற இலக்கத் தகடுகள் கட்டாயம்: மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவிப்பு

by Staff Writer 07-09-2026 | 7:24 AM

Colombo (News 1st) அனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 
மின்சார வாகனங்களுக்காக வழங்கப்படும் பச்சை நிற இலக்கத் தகடுகள் சட்டபூர்வமானவை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஏனைய வாகனங்களுக்கு வெள்ளை மற்றும் மஞ்சள் நிறங்களைக் கொண்ட இலக்கத் தகடுகள் வழங்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே பதிவு செய்யப்பட்ட 88,740 வாகனங்களுக்கான புதிய இலக்கத் தகடுகள் தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவற்றில் 2026 ஜூன் 10 ஆம் திகதி முதல் 2026 ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை பதிவு செய்யப்பட்ட 56,233 இலக்கத் தகடுகளும் அடங்குவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம், ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ குறிப்பிட்டார்.
அத்துடன் 2023 , 2024 ஆகிய 2 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட 32,507 வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்கள் நாராஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள அலுவலகத்திற்கு வருகை தந்து, தமது வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.