நாளொன்றுக்கு 30 மில்லியன் ரூபா நட்டம்

செவனகல சீனி தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 30 மில்லியன் ரூபா நட்டம் - லங்கா சீனி நிறுவனம்

by Staff Writer 02-09-2026 | 8:02 AM

Colombo (News 1st) ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு காரணமாக செவனகல சீனித் தொழிற்சாலை மூடப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு சுமார் 30 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுவதாக லங்கா சீனி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செவனகல சீனித் தொழிற்சாலையின் ஊழியர்களுடன் நேற்று(01) நடைபெற்ற கலந்துரையாடல் எவ்வித தீர்மானமும் இன்றி நிறைவடைந்ததாக அதன் தலைவர் வசந்த அதுல குமார தெரிவித்தார்.

விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

அதற்கமைய, நாளை(03) உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரியே செவனகல சீனித் தொழிற்சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்காரணமாக, செவனகல சீனித் தொழிற்சாலை பாரிய நட்டத்தை எதிர்நோக்குவதாகவும் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்ட கரும்புகளில் 50 வீதமானவை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் லங்கா சீனி நிறுவன தலைவர் வசந்த அதுல குமார தெரிவித்தார்.