பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறை

முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறை

by Staff Writer 01-09-2026 | 7:45 PM

Colombo (News 1st) முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று(01) தீர்ப்பளித்துள்ளது.

முன்னாள் அமைச்சர் ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய குற்றவாளி என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் தீர்ப்பளித்தார்.

2014ஆம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் மே தின ஊர்வலத்தில் கலந்துகொண்ட அரசியல் ஆதரவாளர்கள் குழுவொன்றுக்கு உணவு வழங்குவதற்காக ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான கணக்கிலிருந்து 330,000 ரூபா பணத்தை செலவிட்டு அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியமை, குறித்த செயலை செய்வதற்கு ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளரை தூண்டியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த ஊழல் குற்றச்சாட்டுகளில் சந்தேகநபர் குற்றவாளியென தீர்ப்பளித்த நீதிமன்றம், 14 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

குற்றச்சாட்டொன்றுக்கு 07 வருடங்கள் வீதம் 02 குற்றச்சாட்டுகளுக்கும் 14 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

எனினும் சிறைத்தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்கோள் ஆரம்பம் 
மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால்
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிராக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு 02 குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் 2014ஆம் ஆண்டு சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக பணியாற்றிய காலத்தில் ஸ்ரீலங்கன் கேட்டரிங் நிறுவனத்திற்கு சொந்தமான 330,000 ரூபா பணத்தை மாரவில பகுதியிலுள்ள 'கம்பட கேட்டர்ஸ்' என்ற தனியார் நிறுவனத்திற்கு செலுத்துமாறு அந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியை  வற்புறுத்தியுள்ளார். குற்றஞ்சாட்டப்பட்டவரின் இந்த செயலால் அரசாங்கத்திற்கு நட்டமும் ஏற்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவரின் செயல்கள் தொடர்பாக முறைப்பாட்டாளரால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அதற்கமைய, குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாக அறிவிக்கப்படுகிறார். குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை உத்தரவை வழங்குவதற்கு முன்னர் தண்டனையை குறைத்துக் கொள்வதற்காக ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு உள்ளதா?
மேற்கோள் நிறைவு

தனது சேவைபெறுநர் நோய்வாய்ப்பட்டுள்ளதால் தண்டனையை தளர்த்தி உத்தரவிடுமாறு குற்றஞ்சாட்டப்பட்டவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ வேண்டுகோள் விடுத்திருந்தார்.

மேற்கோள் ஆரம்பம் 
ஜனாதிபதி சட்டத்தரணி ஷவேந்திர பெர்னாண்டோ
"கனம் நீதிபதி அவர்களே, எனது சேவைபெறுநரின் பிள்ளைகள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள். அவரது மனைவியும் நோய்வாய்ப்பட்டுள்ளார். சேவைபெறுநர் கல்லீரல் தொடர்பான நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு தண்டனை உத்தரவை தளர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கோள் நிறைவு

குற்றஞ்சாட்டப்பட்டவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதால் சமூகத்திற்கு முன்மாதிரியாக அமையும் வகையில் அவருக்கு அதிகபட்ச தண்டனை உத்தரவை வழங்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றில் குறிப்பிட்டார்.

மேற்கோள் ஆரம்பம்
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் ஆஜரான சட்டத்தரணி
கனம் நீதிபதி அவர்களே, இது ஊழல் நடவடிக்கையுடன் தொடர்புடைய குற்றமாகும். அரச அதிகாரிகள் பொதுப் பணத்தை பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளார்கள். ஆனால் இவர் ஊழலுடன் தொடர்படைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரச அதிகாரிகளையும் தூண்டியுள்ளார். எனவே, இலஞ்ச சட்டத்தின் 70ஆவது பிரிவின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட ஊழல் எனும் குற்றத்திற்காக 10 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
மேற்கோள் நிறைவு

விடயங்களை ஆராய்ந்த நீதிபதி 02 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளதால், குற்றச்சாட்டொன்றுக்கு 07 ஆண்டுகள் வீதம் 14 வருட சிறைத்தண்டனை விதித்தார்.

மேற்கோள் ஆரம்பம்
மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால்
குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றத்தின் தன்மையைக் கருத்திற்கொண்டு, அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழல் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் தீர்மானமாகும். மக்கள் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளை பொதுப் பொறுப்பளிக்கப்பட்ட அதிகாரியாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர் நிறைவேற்றவில்லை. தனக்கு ஒப்படைக்கப்பட்டிருந்த பொதுப் பொறுப்பை தனது தேவைக்கு பயன்படுத்தியுள்ளார் என்பது புலப்படுகிறது. இதுபோன்ற தவறுகளைச் செய்யும் மக்கள் பிரதிநிதிகளுக்கு பாடமாக அமையும் வகையில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு குற்றச்சாட்டொன்றுக்கு 07 ஆண்டுகள் வீதம் 14 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்படுகிறது
மேற்கோள் நிறைவு

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று பிற்பகல் அழைத்துச் செல்லப்பட்டார்.