ரவி கருணாநாயக்கவிற்கு பிணை

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிப்பு

by Staff Writer 31-08-2026 | 6:44 PM

COLOMBO (News 1st)

ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ்.போதரகம முன்னிலையில் இன்று(31) பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலா 1,000,000 ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டதுடன் வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக 05 அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக்கொண்டு அவர்களை தனது தனிப்பட்ட ஊழியர் குழாத்தில் இணைத்துக்கொண்டமை தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கமையவே முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.

ரவி கருணாநாயக்கவை இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் 04 சந்தர்ப்பங்களில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அவர் ஆஜராகியிருக்கவில்லை.

பின்னர் கடந்த சனிக்கிழமை (29) இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் குழு பத்தரமுல்லை - ரஜமல்வத்தை வீதியிலுள்ள ரவி கருணாநாயக்கவின் வீட்டிற்கு சென்றிருந்தனர்.

எனினும், குறித்த சந்தர்ப்பத்தில் அவர் அங்கு இருக்கவில்லை. 

இன்று(31) காலை 08.15 அளவில் ஆணைக்குழுவில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் அவர் இன்று (31) பகல் 12.40 அளவில் கைது செய்யப்பட்டார்.