.webp)
-559840.jpg)
Colombo (News 1st) தனியார் பாதுகாப்பு சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்தார்.
இதற்கான சட்டத் திருத்த சட்டமூலத்தை எதிர்வரும் சில மாதங்களுக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக, சட்ட மாஅதிபர் திணைக்களம், தொழில் திணைக்களம் மற்றும் பொலிஸாரின் ஒத்துழைப்புகள் பெற்றுக்கொள்ளப்படும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தனியார் பாதுகாப்பு சேவைகளில் 99 வீதமானவர்கள் தற்போது முப்படையினரே காணப்படுவதாக சுட்டிக்காட்டிய அவர் இதனை முறைப்படுத்துவதற்கும் உரிய தரத்தை ஏற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், முப்படையினர் கடைநிலை ஊழியர்களாக செயற்பட வேண்டிய நிலை ஏற்படும் எனவும் இதன் காரணமாக அவர்களின் அடையாளம் மற்றும் கௌரவம் பாதிக்கப்படுமெனவும் கூறினார்.
இதற்கமைய, தனியார் பாதுகாப்பு சேவையின் தரத்தை உயர்த்துவதே இந்த வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கமென பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
