ஒலிபெருக்கி பயன்பாடு குறித்து எச்சரிக்கை

சட்டவிரோதமாக ஒலிபெருக்கி பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

by Staff Writer 30-08-2026 | 7:12 PM

Colombo (News 1st) பிறருக்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒலிபெருக்கிகள் உள்ளிட்ட ஏனைய ஒலி எழுப்பும் சாதனங்களை சட்டபூர்வமாக பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


ஒலி மாசுபாடு காரணமாக குழந்தைகள், பாடசாலை மாணவர்கள், முதியோர்கள் மற்றும் நோயாளர்கள் கடும் சுகாதார மற்றும் மன உளைச்சல்களுக்கு உள்ளாகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிக்கை விடுத்து  தெரிவித்துள்ளனர்.


பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் ஒலி எழுப்பும் சாதனங்களை பயன்படுத்துவது தண்டனை சட்ட கோவையின் 261ஆம் பிரிவின் கீழ் பொதுமக்களுக்கான பாதிப்பு என கருதி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


பொதுவாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதில்லை. எனினும், சமய அல்லது விசேட நிகழ்வுகளின் போது உரிய காரணங்களை ஆராய்ந்து சட்டபூர்வ அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


சட்டவிரோதமான முறையில் அல்லது பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படும் வகையில் அதிக சத்தம் எழுப்பப்படுவது தொடர்பில் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது 118, 119 ஆகிய அவசர உதவி இலக்கங்களுக்கோ அறியத்தருமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.