சீனாவிலிருந்து ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

சீனாவிலிருந்து 10,000 ரயில் தண்டவாளங்கள் இறக்குமதி

by Staff Writer 28-08-2026 | 7:08 AM

Colombo (News 1st)  நாட்டின் ரயில் மார்க்கங்களை புனரமைக்க 10,000 தண்டவாளங்கள் சீனாவிலிருந்து இறக்குமதி  செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது. இறக்குமதி செய்யப்பட்ட தண்டவாளங்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்கும் நடவடிக்கைகள்  முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த 10,000 தண்டவாளங்களில் சுமார் 5,000 தண்டவாளங்கள் கரையோர ரயில் மார்க்கத்தில் வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இடங்க​ளில் 
பொருத்தப்படவுள்ளன.  கொழும்பு கோட்டையிலிருந்து பாணந்துறை வரையான சுமார் 50 இடங்களில் புதிய தண்டவாளங்களை பயன்படுத்தி ரயில் மார்க்கத்தை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாலங்களை நிர்மாணித்தல் மற்றும் புனரமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளுக்கு சுமார் 6 மாத காலம் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக உள்நாட்டு நிதியிலிருந்து சுமார் 2,000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்தவுடன் கரையோர ரயில் மார்க்கத்தில் நாளாந்தம் ஏற்படும் ரயில் தாமதங்களைக் குறைக்க முடியும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்தது.