10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

வறட்சியான வானிலையால் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்பு

by Staff Writer 24-08-2026 | 6:29 AM

Colombo (News 1st) வறட்சியான வானிலை காரணமாக சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.  


பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்கள் தற்போது கண்கானிக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


விவசாய திணைக்களம் மற்றும் விவசாய காப்புறுதி சபைக்கு கிடைத்துள்ள தகவல்களுக்கமைய, சுமார் 10,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில பயிர்கள் முற்றாக அழிவடைந்துள்ளதாக அமைச்சர் சுசில் ரணசிங்க சுட்டிக்காட்டினார். 


விவசாய அமைச்சு மற்றும் விவசாய காப்புறுதி சபை ஊடாக இந்த பயிர் சேதங்களை கண்காணித்து உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். 


இதற்கமைய, சேதங்கள் உறுதிப்படுத்தப்பட்டதன் பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நட்டஈட்டு தொகையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். 


சிறுபோக பயிர்ச்செய்கை தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், மேலும் பயிர் சேதங்கள் ஏற்படாது என எதிர்பார்க்கப்படுவதாக வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். 


இந்த நிலையில், மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அனர்த்த முகாமைத்துவப் பொறிமுறை பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அமைச்சரவை உபகுழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். 


இந்நிலைமையை எதிர்கொள்வதற்கான பொறிமுறையின் செயற்றிறனை அதிகரிப்பது தொடர்பில் ஜனாதிபதி நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.