.webp)

Colombo (News 1st) 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை தௌிவுபடுத்துமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்திருந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.
இருதரப்பின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வரை அந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சில பிரதிநிதிகளை இன்று(20) பாராளுமன்றத்திற்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையில் 225 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான அவர்களின் நிலைப்பாட்டை முன்வைப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச முயற்சித்தார்.
எனினும் இந்த முயற்சி பாராளுமன்ற நடைமுறைக்கு முற்றிலும் முரணானது என ஆளும் கட்சி தொடர்ச்சியாக சுட்டிக்காட்டியது.
இவ்வாறான பின்புலத்தில் எதிர்க்கட்சி தலைவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர், சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் தௌிவுபடுத்தி இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவர் ரஜீவ் அமரசூரிய, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
நேற்றைய சபை அமர்வில் இடம்பெற்ற செயற்பாடுகள் மற்றும் அவ்வாறானதொரு கூட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை கருத்திற்கொள்ளும் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறானதொரு வாய்ப்பை வழங்க அரசாங்கம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்பதால் இது தொடர்பில் இணக்கம் இல்லை என்பது தௌிவாகியுள்ளதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய பாராளுமன்ற சபை அமர்வில் அரசாங்கம் விடுத்த அச்சுறுத்தலே அரசாங்கத்தின் நிலைப்பாடாக அமைந்துள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
எதிர்க்கட்சி ஏற்கனவே 22ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பதுடன் இந்த கூட்டமானது அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கே பயனுள்ளதாக இருக்கும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
எனவே இருதரப்பின் பங்கேற்பை உறுதிப்படுத்தும் வரை அந்த கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டியிருக்கும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு கூட்டம் தொடர்பான யோசனை முன்மொழிந்தமைக்காகவும் தொடர்ச்சியாக அவ்வாறானதொரு நடவடிக்கையை எடுத்தமைக்காகவும் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
