.webp)

Colombo (News 1st) உயர் நீதிமன்ற நீதியரசர்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடிக்கும் பிரேரணை அடங்கிய அரசியலமைப்பின் 22ஆவது திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் இன்று(18) சமர்ப்பிக்கப்பட்டது.
ஏனைய நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதெல்லையை நீடித்தல் உள்ளிட்ட நீதிமன்ற அமைப்புகள் திருத்த சட்டமூலமும் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவினால் இந்த திருத்தச் சட்டமூலங்கள் சமர்பிக்கப்பட்டன.
இதற்கமைய, திருத்தச் சட்டமூலங்கள் மீதான முதலாவது வாசிப்பு இன்று இடம்பெறுவதுடன் இரண்டாம் வாசிப்பு நாளை (19) இடம்பெறுமென அமைச்சர் ஹர்ஷன நாணாயக்காரவினால் இதன்போது அறிவிக்கப்பட்டது.
முதலாம் வாசிப்பைத் தொடர்ந்து, அரசியலமைப்பின் 121ஆவது உறுப்புரைக்கு அமைவாக இந்த திருத்தங்களின் அரசியலமைப்பு தன்மையை சவாலுக்குட்படுத்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய எந்தவொரு அமைப்பிற்கும் அல்லது குடிமகனுக்கும் 14 நாட்கள் அவகாசம் கிடைக்கும்.
இந்த கால அவகாசம் எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதியுடன் நிறைவடையும்.
இந்த மனுக்களை பரிசீலித்து உயர் நீதிமன்றம் தனது தீர்மானத்தை சபாநாயகருக்கு அறிவிக்க 21 நாட்கள் அவகாசம் வழங்கப்படுவதால், செப்டம்பர் 22ஆம் திகதியளவில் தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை வாக்களிப்பினால் நிறைவேற்றப்பட வேண்டும்.
நீதிமன்ற அமைப்புகள் திருத்த சட்டமூலம் ஒரு சாதாரண சட்டமூலம் என்பதால், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும்.
