மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூடு

மாளிகாவத்தையில் துப்பாக்கிச்சூட்டில் நபர் பலி

by Staff Writer 10-08-2026 | 6:23 PM

Colombo (News 1st) மாளிகாவத்தை - சங்கராஜ மாவத்தையில் நேற்று(10) பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் பிரபல குழுவொன்றின் தலைவரான கஞ்சிப்பானை இம்ரானின் நெருங்கிய உறவினரொருவரே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 

கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த மொஹமட் அஸ்மி மொஹிதீன் என்ற 54 வயதுடைய வர்த்தகர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

துப்பாக்கிதாரியைத் தேடி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் இரண்டு குழுக்களுக்கு இடையிலான மோதலின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இதனிடையே, மலேசியாவில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் நபரான 'ரத்மலான சைமா' எனப்படும் தனுஷ்க கௌஷல்ய உள்ளிட்ட மூவர் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டனர். 

உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல உள்ளிட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

குறித்த சந்தேகநபர்கள் மூவரில் ஒருவர் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும்  பிரபல குற்றவாளியான கஞ்சிப்பானை இம்ரானின் பிரதான உதவியாளரென அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இலங்கை மற்றும் மலேஷிய பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.