நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்ற திட்டம்

பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்ற ஜனாதிபதி ஆலோசனை

by Staff Writer 01-08-2026 | 8:14 AM

Colombo (News 1st) பிரதேச ரீதியாக சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை பெற்றுக்கொள்ளும் வகையில் பிரதேச நிர்வாக அலகுகளை அபிவிருத்தி அலகுகளாக மாற்றுவதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2027 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடலில் நேற்று(31) கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். 

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள நிர்வாக முறைமைக்கு பல தசாப்தங்கள் கடந்திருந்தாலும் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

சிறு திருத்தங்களுடன், தற்போது காணப்படும் முறையையே தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடிந்தாலும் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு முழுமையான மாற்றமே என்பதையும் அவர் இங்கு சுட்டிக் காட்டினார். 

இந்த விடயத்தை ஒரே தடவையில் செய்ய முடியாது என்றாலும் நிர்வாகத் துறையில் அது குறித்த  கருத்தாடலை ஏற்படுத்தி அதற்கு அடித்தளம் இடுவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார். 

அரச நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.