.webp)

Colombo (News 1st) யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
முத்துலிங்கம் கோகுலராஜ் திருவுளச்சீட்டு மூலம் இன்று தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் தெரிவு, வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன் தலைமையில் இன்று நடைபெற்றது.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பாக முத்துலிங்கம் கோகுலராஜ் போட்டியிட்டார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பாக பவுலினா சுபோதினி தபானராசன் போட்டியிட்டார்.
இதன்போது இடம்பெற்ற திறந்த வாக்கெடுப்பில் இரு வேட்பாளர்களுக்கும் தலா 07 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
அதனையடுத்து திருவுளச்சீட்டு மூலம் உப தவிசாளராக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உறுப்பினர் முத்துலிங்கம் கோகுலராஜ் தெரிவு செய்யப்பட்டார்.
18 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி நகர சபையில் தமிழரசு கட்சிக்கு 6 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு 2 உறுப்பினர்களும் தேசிய மக்கள் சக்திக்கு 3 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனாநாயக கட்சிக்கு உறுப்பினரொருவரும் உள்ளனர்.
சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் பதவியிலிருந்தும் நகர சபை உறுப்புரிமையிலிருந்தும் ஞானப்பிரகாசம் கிஷோரை நீக்கி வட மாகாண ஆளுநர் வர்த்தமானி வௌியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, வட மாகாண ஆளுநர் வௌியிட்ட வர்த்தமானியை சவாலுக்குட்படுத்தி சாவகச்சேரி நகர சபையின் உப தவிசாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 05ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
