.webp)
-557972.jpg)
COLOMBO (News 1st) ‘நேர்மையான கலாசாரம் - க்ளீன் ஶ்ரீலங்கா’ எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய நேர்மை வாரம் இன்று (27)ஆரம்பமாகின்றது.
ஜனாதிபதி செயலாளர், கலாநிதி நந்திக குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் ஜனாதிபதி செயலகம் மற்றும் 'க்ளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தினால் செயற்படுத்தப்படுகின்றது.
"தேசிய நேர்மை வாரம்" இன்று காலை 9 மணிக்கு ஜனாதிபதி செயலகம் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் ''தேசிய நேர்மை சத்தியப்பிரமாணம்'' செய்தல் மற்றும் நடத்தை கோவையை வெளியிடுதலுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டின் அரச சேவையின் தரம், வினைத்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதுடன், ஊழலற்ற முன்மாதிரியான நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதே இந்த வாரத்தை பிரகடனப்படுத்துவதன் முக்கிய நோக்கமாகும்.
'
'நேர்மை'' என்பது சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு மற்றும் சுய கண்காணிப்புடன், மனசாட்சிக்கு உடன்பட்டு, சரியான, வெளிப்படைத்தன்மை மற்றும் தார்மீக ரீதியில் தனது சேவையை வழங்குவதை குறிப்பதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நிறுவன ரீதியான நேர்மையினை மேம்படுத்தலுக்கான தினமாக இன்றைய (27) தினமும்
நிதி, டிஜிட்டல், தொழில்முயற்சி மற்றும் தொழில்நுட்ப ரீதியான நேர்மையினை மேம்படுத்தலுக்கான தினமாக நாளைய (28) தினமும்
ஆன்மீக, தார்மீக, கலாசார மற்றும் சமூக ரீதியான நேர்மையினை மேம்படுத்தலுக்கான தினமாக நாளை மறுதினமும் (29)
செயற்பாட்டு, உட்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் உழைப்புசார் நேர்மையை மேம்படுத்தலுக்கான தினமாக எதிர்வரும் 30ஆம் திகதியும்
சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமிய மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மை மேம்படுத்தலுக்கான தினமாக எதிர்வரும் 31ஆம் திகதியும்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி அலுவலகத்தின் வழிகாட்டலின் கீழ் ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் ஸ்தாபிக்கப்பட்டுள்ள "உள்ளக அலுவல்கள் பிரிவினூடாக பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் அல்லது ஊழல் செயற்பாடுகள் தொடர்பான முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
பொதுமக்கள் QR குறியீடுகள், மின்னஞ்சல், கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் அல்லது இணையத்தள செய்திகள் ஊடாக தமது முறைப்பாடுகளை சமர்ப்பிக்கலாம்.
அத்துடன் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் நிறுவன தலைவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினால் விசேட டிஜிட்டல் கட்டமைப்பும் செயற்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற நிறுவனங்களிலும் எதிர்வரும் 31ஆம் திகதிக்கு பின்னர் டிசம்பர் 31ஆம் திகதி வரை இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
