ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வௌிவரும் விடயங்கள்

ஹோமாகம தீ விபத்து தொடர்பில் வௌிவரும் விடயங்கள்

by Staff Writer 22-07-2026 | 9:36 AM

Colombo (News 1st) ஐவர் பலியான தீ விபத்தால் சேதமடைந்த ஹோமாகம - கட்டுவான பாதுகாப்பு தலைக்கவச தயாரிப்பு தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் புதுப்பிக்கப்படவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

2023ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரத்தை நீடிப்பதற்காக தொழிற்சாலையின் தீ பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்ட அதன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கைகளை சமர்ப்பிக்க அதன் நிர்வாகம் தவறியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் கபில ராஜபக்ஸ குறிப்பிட்டார்.

இதனால் கடந்த 2ஆம் திகதி கடிதம் மூலம் சுற்றுச்சூழல் அனுமதிப்பத்திரம் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டதாகவும் அதனை மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு உரிய ஆவணங்களை 20 நாட்களுக்குள் மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையிடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் அது குறித்து கண்டறிவதற்காக அப் பகுதி சுற்றுச்சூழல் அதிகாரி உள்ளிட்ட குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

தீ விபத்தினால் அப்பகுதியை சுற்றியுள்ள சூழலில் ஏதேனும் அபாயகரமான இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்கே அவர்கள் அனுப்பப்பட்டுள்ளனர்.

தீ விபத்தின் பின்னர் எஞ்சியுள்ள இரசாயனப் பொருட்களை முறையாக அகற்றுவதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்படும் என மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

அத்துடன் இது குறித்து கண்காணிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, தீ விபத்தில் உயிரிழந்த 5 பேரின் பிரேத பரிசோதனைகள் இன்று (22) முன்னெடுக்கப்படவுள்ளன.

நீதவான் விசாரணை நேற்று (21) பிற்பகல் ஹோமாகம நீதவானால் நடத்தப்பட்டது.

3 மாடிகளை கொண்ட தொழிற்சாலையின் மூன்றாவது மாடியில் நேற்று (21) காலை 9.30 அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கொழும்பு, தெஹிவளை - கல்கிசை மற்றும் கோட்டை மாநகர சபைகளின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஹொரணை நகர சபை ஆகியவற்றின் 10-இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்காக விமானப்படை, இராணுவம் மற்றும் பொலிஸாரும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அந்நேரத்தில் தொழிற்சாலையில் 80-இற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தீ விபத்து தொடர்பில் மேலதிக விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.