சி.டி.விக்ரமரத்னவின் இறப்பு தொடர்பில் விசாரணை

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் இறப்பு தொடர்பில் விசாரணை

by Staff Writer 20-07-2026 | 6:33 PM

 Colombo (News 1st) முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்னவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு விசேட விசாரணை பிரிவினூடாக மேற்கொள்வதற்கு நீதிமன்றம் இன்று (20) அனுமதி வழங்கியுள்ளது.

நகர்த்தல் பத்திரத்தின் ஊடாக வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த அனுமதி வழங்கப்பட்டது.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி.விக்ரமரத்ன துப்பாக்கிசூடு பட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மாலபே பொலிஸாரால் இதுவரை மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளை தமது பிரிவின் கீழ் கொண்டுவருமாறு மேல் மாகாண தெற்குப் பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் உத்தரவிட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து தெரிவித்தனர்.

விடயங்களை ஆராய்ந்த கடுவெல நீதவான் அருண இந்திரஜித் புத்ததாச இதற்கு அனுமதி வழங்கினார்.

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் சி.டி விக்ரமரத்னவிற்கு துப்பாக்கிச்சூடு பட்ட கைத்துப்பாக்கி, அதற்காக பயன்படுத்திய தோட்டாக்கள் மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து வழக்கு சான்றுப் பொருட்களையும் எதிர்வரும் 28ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த சான்றுப் பொருட்களை அரச இரசாயனப் பகுப்பாய்வாளருக்கு அனுப்பி அது தொடர்பான பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.