செப்டம்பரில் ஆரம்பமாகும் வோல்பெகியா திட்டம்

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெகியா திட்டம் செப்டம்பரில் ஆரம்பம் - சுகாதார அமைச்சர்

by Staff Writer 20-07-2026 | 9:18 AM

Colombo (News 1st) டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெகியா திட்டத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

இதற்கான முன்னோடித் திட்டம் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அடுத்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

வோல்பெகியா திட்டத்தை நடைமுறைப்படுத்த தெமட்டகொடை பகுதியில் இடமொன்றை தயார்படுத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலால் 75,321 பேர் பீடிக்கப்பட்டுள்ளனர். 

மேல் மாகாணத்தின் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் 162 சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளை அதி அபாய டெங்கு வலயங்களாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு அறிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 70 சதவீதமானோர் பெண்களாவர். 

இதேவேளை, 11 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படும் விசேட டெங்கு ஒழிப்பு திட்டம் இன்றும் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் 11 மாவட்டங்களிலுள்ள 63 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு நிலைமையை கண்காணிப்பதற்கும் தடுப்பதற்கும் முகாமைத்துவத்திற்குமான வழிகாட்டல் கோவை இன்று மீண்டும் வௌியிடப்படவுள்ளது.

உயர்கல்வி அமைச்சில் இன்று காலை 10 மணி அளவில் இதற்கான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் டெங்கு பரவலை ஆரம்பத்திலேயே கண்டறிதல், நோயாளர்களை உரிய முறையில் பராமரித்தல், கண்காணிப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் டெங்கு நுளம்பு பெருகுவதைத் தடுப்பதற்கான முறையான வழிமுறைகளை அறிமுகப்படுத்தல் என்பன இந்த வழிகாட்டல் கோவை வௌியிடப்படுவதன் பிரதான நோக்கங்களாகும்.