27 உயிர்களை பறித்த பாங்கொக் தீ விபத்து..

27 உயிர்களை பறித்த பாங்கொக் தீ விபத்து..

by Staff Writer 13-07-2026 | 4:45 PM

Colombo (News 1st) தாய்லாந்தின் பாங்கொக் நகரில் மதுபானக் கடையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

அவர்களில் 22 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நேற்று (12) நள்ளிரவு திடீரென மதுபானக் கடையில் புகை பரவியதாகவும் அதன் பின்னர் மின்சாரம் தடைப்பட்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

தீ விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக தாய்லாந்து பிரதமர் அனுடின் சான்விராகுல் தெரிவித்துள்ளார்.

புகையை சுவாசிப்பதைத் தவிர்ப்பதற்காகவும் தீப்பிழம்புகளிலிருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காகவும் வாடிக்கையாளர்கள் குறித்த மதுபானக் கடையின் பின்புறத்திற்கு சென்றுள்ளனர். 

இதனையடுத்து கடையின் பின்புறத்தில் எவ்வித அவசரக் கதவுகளும் காணப்படாமையினால் அவர்கள் அங்கிருந்து வௌியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியிருக்கலாம் என தாய்லாந்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். 

எனினும், குறித்த மதுபானக்கடை முறையான அனுமதிப்பத்திரங்களுடன் நடத்தப்பட்டு வந்ததாக பாங்கொக் நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 18 பெண்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர்.