சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்..

by Staff Writer 02-07-2026 | 7:11 AM

Colombo (News 1st) மெழுகுவர்த்தியையும் பூக்களையும் கைகளில் ஏந்தி, உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்களுக்கு சென்ற நிராயுதபாணிகளான அப்பாவி உயிர்கள் உள்ளிட்ட 278 பேரை காவுகொண்ட கொடூர குற்றச்செயல்.

500-இற்கும் மேற்பட்டோரை நிரந்தரமாக ஊனமாக்கிய பாரதூரமான குற்றம்.

2019 ஏப்ரல் 21ஆம் திகதி நடத்தப்பட்ட இந்த படுகொலையின் பின்னணி மற்றும் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் வெளிப்பட்டுவரும் தீர்க்கமான காலகட்டமே இது.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, தற்போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அறிக்கைகள் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக முன்வைக்கப்படுகின்றன.

இந்த திட்டமிடப்பட்ட மிலேச்சத்தனமான கொலைகளுக்கு பின்னால் இருந்தவர்கள் நாளுக்கு நாள் அம்பலப்படுத்தப்படுகின்றனர்.

இந்த விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் விஞ்ஞானபூர்வமான விசாரணையை மேற்கொண்ட குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர், மிகக் குறுகிய காலத்திற்குள் இந்த குற்றத்தின் பின்னணியை கண்டறிந்தனர்.

எனினும், நீதி நிலைநாட்டப்படுவதற்கு முன்னதாக ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்ஸ திறமையான விசாரணை அதிகாரிகளை  நாலாபுறமும் இடமாற்றம் செய்தார். 

விசாரணை அதிகாரி மீது பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி விளக்கமறியலில் வைத்தனர்.

இந்த தீர்மானங்கள் தவறானவை என்பது இறுதியில் நீதிமன்றத்தில் உறுதியானது.

இவ்வாறு மூடிமறைக்க முயன்ற விசாரணையே மீண்டும் புத்துயிர் பெற்று நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையிலேயே உணவுத்தவிர்ப்பு, முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புகள், சத்தியாக்கிரகம், கருத்தரங்குகள் என பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மக்கள் ஏகோபித்த குரலில் கோரிய நீதி நிலைநாட்டப்பட்டு வருவதை பார்த்துக்கொண்டே, இத்தகைய கொடூரமான குற்றங்கள் தொடர்பில்  பல்வேறு எதிர்ப்புகளை உருவாக்குகின்றனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை தொடரும் போது, மேலும் பல கொடூரமான குற்றச்செயல்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லசந்த விக்கிரமதுங்க படுகொலை, கீத் நொயார் மீதான தாக்குதல், பிரகீத் எக்னெலிகொட காணாமலாக்கப்பட்டமை, உபாலி தென்னகோன் மற்றும் போத்தல ஜயந்த ஆகியோர் மீதான தாக்குதல்கள் அத்தகைய சில குற்றங்களாகும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களில் பெயர் அடிபடுகின்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானும்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டமை குறித்து பிள்ளையான் தொடர்பான விசாரணைகளில் அம்பலமாகியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது பிணையில் உள்ளார்.

நாட்டிலுள்ள பொதுமக்களின் பணத்தில் ஒன்றரை கோடி ரூபாவிற்கும் அதிக தொகையை 36 மணித்தியாலங்களில் செலவழித்து தனிப்பட்ட வெளிநாட்டு பயணம் மேற்கொண்டமையே ரணில் மீதான குற்றச்சாட்டாகும். 

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடமும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

நாம் அனைவரும் அறிந்த, பாரிய ஊழல் நிறைந்த எயார்பஸ் மோசடி விவகாரம் தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.

2013ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 10 எயார்பஸ்களை கொள்வனவு செய்வதற்கான கொடுக்கல் - வாங்களில் 16.84 மில்லியன் டொலர் இலஞ்சமாக கோரப்பட்டிருந்தது.

பின்னர் அதில் 02 மில்லியன் டொலர் பணம், அக்காலப்பகுதியில் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்த கபில சந்திரசேனவின் மனைவியின் புரூனே வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டிருந்தது.

இந்த 02 மில்லியன் டொலர்களில் இருந்து மஹிந்த ராஜபக்ஸவிற்கும் சமல் ராஜபக்ஸவின் மகனான ஷமீந்திர ராஜபக்ஸவிற்கும் பணம் வழங்கப்பட்டதாக கபில சந்திரசேன விசாரணையில் வௌிப்படுத்தினார்.

ஷமீந்திர நாட்டிலும் இல்லை - கபில உயிருடனும் இல்லை

இந்த விசாரணையும் தொடர்கிறது..

பசில் ராஜபக்ஸ நாட்டை விட்டுச்சென்றதன் பின்னர் கட்சியின் அமைப்பாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாமல் ராஜபக்ஸவும் பாரதூரமான வழக்கை எதிர்நோக்கியுள்ளார்.

'க்ரிஷ்' நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபா பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு தற்போது மேல் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இது 2016ஆம் ஆண்டு முன்வைக்கப்பட்ட முறைப்பாடாகும்.

அக்காலப்பகுதியில் ஒரு சந்தர்ப்பத்தில் விசாரணை நிறுவனங்களுக்கு சாட்சியமளிக்க நாமல் அரைக்காற்சட்டையை அணிந்து சென்றிருந்தார்.

இந்த கொடுக்கல் - வாங்கல் தற்போது நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது.

நாமலின் சகோதரரான யோஷித ராஜபக்ஸ மீதும் பல வழக்குகள் உள்ளன.

'டெய்ஸி பாட்டியின் மாணிக்கப் பை' என பிரபலமாகிய சட்டவிரோத சொத்துக்குவிப்பு வழக்கும் இப்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.

இதேவேளை, கடற்படை அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தொடர்பான விசாரணைக்காக யோஷித கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்றுவிட்டு, கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைந்துகொண்ட யோஷித, முறையான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவிற்கு பயிற்சிக்காக அனுப்பப்பட்டிருந்தார். 

இதற்காகவும் மக்கள் பணமே செலவிடப்பட்டது.

தற்போது இந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.

அது மட்டுமா 'சிரிலிய சவிய' கணக்கு தொடர்பிலும் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஷிரந்தி ராஜபக்ஸ உள்ளிட்ட மூவரின் கூட்டுவங்கி கணக்காக அரச வங்கியொன்றின் சுதுவெல்ல கிளையில் பேணப்பட்ட கணக்கே இவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டால் அமையப்பெற்ற 9 இலக்கங்களை உள்ளடக்கிய தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி இந்த கணக்கு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கடந்த பெப்ரவரி மாதம் ஷிரந்தி, நாமல் ஆகிய இருவருமே நிதிக்குற்ற புலனாய்வு பிரிவிற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

சொத்துக்கள் எவ்வாறு ஈட்டப்பட்டன என்பது குறித்த தகவல்களுக்காக நாமலின் இளைய சகோதரரான ரோஹித ராஜபக்ஸவிடமும் சில நாட்களுக்கு முன்னர் விசாரணை அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றிருந்தனர்.

ரோஹித எவ்வித வேலையும் இல்லாத ஒரு காலப்பகுதியில், 02 வணிகங்களில் எவ்வாறு முதலீடு செய்தார் என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகின்றது.

ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் கொலையின் பின்னணியும் தற்போது வெளிச்சத்திற்கு வந்தவண்ணம் உள்ளது.

தாஜுதீன் எவ்வாறு கடத்தப்பட்டார், எப்படி கொல்லப்பட்டார், அதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் வந்து சென்றவர்கள் யார் என்பது விசாரணை அதிகாரிகளுக்கு தற்போது பெரும்பாலும் தெரியவந்துள்ளது.

வலுவான விஞ்ஞானபூர்வ சான்றுகளுடன் இந்த குற்றங்கள் தொடர்பான வழக்குகளை நாம் எதிர்வரும் நாட்களில் நீதிமன்றங்களில் காண முடியும்.

இவை மாத்திரமல்ல!

பரபரப்பை ஏற்படுத்திய மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்த விசாரணையும் இப்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளது.

நாட்டிலிருந்து தப்பியோடிய அர்ஜுன மஹேந்திரனை எதிர்வரும் நாட்களில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் உழைக்கும் மக்கள் ஓய்வு பெற்ற பின்னர் வாழ்வதற்காக வைத்துள்ள ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மாத்திரம் ஒரே கணத்தில் 8 பில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுவதை காண மக்கள் காத்திருக்கும் தருணம் இதுவாகும்.

ரவி கருணாநாயக்க உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டாவது பிணைமுறி கொடுக்கல் - வாங்கல் வழக்கு, அதாவது 2016ஆம் ஆண்டு கொடுக்கல் - வாங்கல் தொடர்பான வழக்கு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைய நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

சட்ட மாஅதிபர் உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையில், அந்த வழக்கை இப்போது மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இதேவேளை, ரவி கருணாநாயக்கவின் கட்சியின் செயலாளரான ஷாமிலா பெரேரா, முறையான நடைமுறைகளுக்கு புறம்பாக மூவரை தேசிய லொத்தர் சபையில் இணைத்து, அவர்களை ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட பணிகளில் ஈடுபடுத்திய குற்றச்சாட்டில் நேற்று(30) கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவியான சஷி வீரவன்ச, தமக்கு அதிகாரம் இருந்த காலத்தில் போலி தகவல்களை வழங்கி இராஜதந்திர கடவுச்சீட்டுகளை பெற்றுக்கொண்ட சம்பவமும் இப்போது தீர்க்கமான கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த வழக்கில் சஷி வீரவன்சவிற்கு 02 வருட கால சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்த தண்டனைக்கு எதிராக சஷி வீரவன்ச மேன்முறையீடு செய்த போதிலும் நீதிமன்றம் அந்த கோரிக்கையை நிராகரித்தது.

அதாவது அவர் இப்போது தண்டனையை அனுபவிக்க வேண்டும்.

ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில், மாணவர்களுக்கு புத்தகங்கள் மற்றும் பைகளை வழங்குவதற்காக அரச வங்கிகளில் இருந்து திரட்டப்பட்ட பணத்தை தனது தனிப்பட்ட கணக்குகளில் வைப்பு செய்த பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத்திற்கு எதிராகவும் தற்போது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் சாமர சம்பத் தற்போது பிணையில் உள்ள போதிலும், வழக்கு இப்போது தீர்க்கமான கட்டத்தில் உள்ளது.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸவின் மகனான ரக்கித ராஜபக்ஸ, ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க உள்ளிட்ட மூவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

'ஹரக் கட்டா' என்பவரை தடுப்புக்காவல் உத்தரவிலிருந்து நீக்கி, விளக்கமறியலில் வைப்பதற்காக 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்றமையே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.

இது குறித்த தீர்க்கமான விசாரணையும் வழக்கு விசாரணையும் தற்போது நடைபெற்று வருகின்றன.

பல பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு எதிரான வழக்கிலும் தற்போது தண்டனை விபரம் அறிவிக்கப்படவுள்ளது.

இதன் தீர்ப்பு எதிர்வரும் ஜூலை 28ஆம் திகதி வெளிப்படுத்தப்படவுள்ளது.

இவை சில உதாரணங்கள் மாத்திரமே.

மேலும் பல விசாரணைகள், வழக்குகள் மற்றும் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் வழங்கிய ஆணையின் மூலம் மக்கள் எதிர்பார்த்த ஒரு விடயம் உள்ளது.

அதுவே  - ‘நீதி’

மக்களுக்கு எதிரான இந்த குற்றங்களுக்கு நீதி கிடைப்பதை காண்பதே மக்களின் ஒரே எதிர்பார்ப்பாகும்.

அதனை தடுப்பதே மக்களுக்கு எதிராக குற்றங்களை புரிந்தவர்களின் ஒரே நோக்கமாகும்.

மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டியது ஆட்சியாளர்களின் முதன்மை பொறுப்பாகும்.

நினைவில் கொள்ளுங்கள்- மக்கள் விழிப்புடனேயே இருக்கின்றனர்..