A/L பரீட்சை திகதியை மாற்ற வேண்டிய தேவை இல்லை

A/L பரீட்சை திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10 ஆரம்பமாகும் - கல்வி அமைச்சு உறுதி

by Staff Writer 21-06-2026 | 9:10 PM

Colombo (News 1st) எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை மாற்ற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

திட்டமிட்டபடி ஆகஸ்ட் 10ஆம் திகதி உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய கல்வி நிறுவகம் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களுக்கு அமைய உயர்தர மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை நிறைவு செய்வதற்கு 300 நாட்கள் தேவைப்படுகின்றன.

இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட திகதியிலிருந்து, எதிர்வரும் ஆகஸ்ட் 7ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 343 நாட்கள் பாடசாலை தினங்களாக காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது தடவையாகத் தோற்றவுள்ள மாணவர்களுக்கு, கடந்த பரீட்சை பெறுபேறுகள் வெளியாகிய திகதியிலிருந்து இம்முறை பரீட்சை நடைபெறும் திகதி வரையான கால இடைவெளி 4 மாதங்களும் 10 நாட்களாகும். 

அதற்கமைய உயர்தரப் பரீட்சைக்குத் தயாராவதற்குத் தேவையான காலம் வழங்கப்பட்டுள்ளமையினால், பரீட்சை திகதிகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லையெனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.