.webp)

Colombo (News 1st) உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய சிலர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலும் இடையூறு விளைவிக்கும் வகையிலும் திட்டமிட்ட செயற்பாட்டில் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம், கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று(08) அறிவித்துள்ளது.
தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் உள்ள அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நகர்த்தல் பத்திரத்தினூடாக நீதிமன்றத்திற்கு அறிவித்த போதே, கோட்டை நீதவான் பசன் அமரசேனவிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று இதனை அறிவித்துள்ளது.
சந்தேகநபரான சுரேஷ் சலே விசாரணைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்படுவதாகவும் குறித்த பாதிப்பை ஏற்படுத்தும் செயற்பாடுகளுக்கு உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர உள்ளிட்ட அரசியலுடன் தொடர்புடைய நபர்கள் ஆதரவு வழங்கி வருவதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிப்படுத்தப்படாத அரசியல் பின்னணி வௌிக்கொணரப்படுவதைத் தடுக்கும் நோக்கிலேயே இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதாக நியாயமான சந்தேகம் எழுந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
