.webp)
-617527-556720.jpg)
Colombo (News 1st)
எல்லை தாண்டிய இணையத்தள மோசடிகள் மற்றும் தொலைபேசி/சைபர் மோசடிகளை (Telecom and online fraud) ஒடுக்கவும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விஸ்தரிக்கவும் சீனாவும் இலங்கையும் இணைந்து கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இலங்கையிலுள்ள சீன தூதரகம் விசேட அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக உலகம் முழுவதும் தொடர்ச்சியாக அரங்கேறி வரும் இந்த எல்லை தாண்டிய சூதாட்டம் மற்றும் சைபர் மோசடிகள், சாதாரண குற்றச் செயல்களின் எல்லைகளைத் கடந்து சர்வதேச ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக (Transnational organized crime) உருவெடுத்துள்ளதாக தூதரகம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அலுவலகம் (UNODC) சுட்டிக்காட்டியுள்ளதன் பிரகாரம் இத்தகைய மோசடி மையங்கள் (Scam centers) தற்போது தென்கிழக்காசியாவுக்கு வெளியேயுள்ள ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவி வருவதுடன் இந்த குற்ற வலைப்பின்னல்கள் ஆட்கடத்தலுடன் (Human trafficking) கடுமையாக பிணைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான குற்றங்களால் சீனப் பிரஜைகளே பெருமளவில் பாதிக்கப்படுவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு மற்றும் சட்டப் பின்னணி : எல்லை தாண்டிய சூதாட்ட வர்த்தகம் தொடர்பாக சீன அரசாங்கத்தின் நிலைப்பாடு மாறாத ஒன்றாக இருப்பதுடன் சீன குற்றவியல் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்கள் மூலம் எல்லை தாண்டிய சூதாட்ட நடவடிக்கைகள் குற்றவியல் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதற்கமைய சீன அரசாங்கம் 03 கட்டளைகளை பிறப்பித்துள்ளது :
1. சீன மூலதனத்தை (நிதி முதலீடுகள்) வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளில் (Casinos) முதலீடு செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
2. சீனப் பிரஜைகள் வெளிநாட்டு சூதாட்ட விடுதிகளை இயக்குவதில் ஈடுபடுவது தடை செய்யப்பட்டுள்ளது.
3. வெளிநாட்டு சூதாட்ட விடுதிகள் மூலம் சீனப் பிரஜைகளை சூதாட்டத்திற்கு தூண்டுவது அல்லது அழைப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய சூதாட்ட நடவடிக்கைகள் நிதி அழிவுகளை ஏற்படுத்துவது மட்டுமன்றி ஆட்கடத்தல், கடத்தல்கள், சட்டவிரோத காவலில் வைத்தல் (Unlawful detention), நிதித்தூய்தாக்கல் (Money laundering) மற்றும் எல்லைகளை சட்டவிரோதமாக கடத்தல் (Illegal border crossing) போன்ற பல கடுமையான குற்றங்களுக்கு வழிவகுப்பதாக சீனா கூறுகிறது.
சர்வதேச ஒத்துழைப்பும் ஏனைய நாடுகளும் :
பாரம்பரிய குற்றங்கள் இணையம் (Internet) ஊடாக அதிவேகமாக பரவி வரும் பின்னணியில் சீனா இதற்கு முன்னரும் பல நாடுகளுடன் இணைந்து வெற்றிகரமான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை பேணியுள்ளது.
ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் (UAE), மியன்மார் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுடன் இணைந்து செயற்பட்டு அந்த நாடுகளில் தங்கியிருந்த பெருமளவிலான மோசடிக்காரர்களை கைது செய்து சீனாவுக்கு நாடு கடத்துவதில் சீனா வெற்றியடைந்துள்ளது.
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக பொதுவான திட்டத்தை அமைப்பதற்காக "தொலைபேசி மற்றும் ஒன்லைன் மோசடிகளுக்கு எதிரான சர்வதேச கூட்டணி" (International alliance against telecom and online fraud) ஒன்றை உருவாக்குவதற்கும் சீனா முன்மொழிந்துள்ளது.
இலங்கையின் தற்போதைய நிலையும் சுற்றிவளைப்புகளும் :
இந்த ஆண்டின் (2026) ஆரம்பத்தில் இருந்து ஏனைய நாடுகளில் செயற்பட்டு வந்த ஒன்லைன் சூதாட்டம், சைபர் மோசடிகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய "சாம்பல் மற்றும் கருப்பு" (Criminal grey and black industries) குற்றக் கும்பல்கள் இலங்கைக்குள் நுழையும் போக்கும் அதிகரித்துள்ளது. இது கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய குற்ற வலைப்பின்னல்கள் "அதிக தொலைதூர மற்றும் ஆபத்தான" பிராந்தியங்களுக்கு விரிவடைவதன் நேரடி விளைவு என தூதரகம் சுட்டிக்காட்டுகிறது.
இதன் காரணமாக சீன தூதரகம் இலங்கையின் வெளிவிவகார, நிதி மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சுக்களுடனான தொடர்பாடல்களையும் ஒருங்கிணைப்பையும் தற்போது பலப்படுத்தியுள்ளது.
இதன் விளைவாக இலங்கை பாதுகாப்புப் படையினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது பல சட்டவிரோத சூதாட்ட மற்றும் மோசடி மையங்கள் முற்றுகையிடப்பட்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உட்பட பெருமளவிலான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட சில சீனப் பிரஜைகள், மேலதிக விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக சீன காவல்துறை அதிகாரிகளிடம் (Public security authorities) ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சுற்றிவளைப்புகளுக்காக இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, பொதுப்பாதுகாப்பு அமைச்சு, குடிவரவு-குடியகல்வு திணைக்களம் மற்றும் காவல்துறை வழங்கிய அர்ப்பணிப்பை சீனா உயர்வாகப் பாராட்டியுள்ளது.
இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கையும் எதிர்கால நடவடிக்கைகளும் :
சட்டவிரோத இணையத்தள சூதாட்டங்கள் மற்றும் தொலைபேசி மோசடிகள் இலங்கைக்குள் பரவுவதைத் தடுக்க உடனடியாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அது நாட்டின் சர்வதேச நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதுடன் பொதுப் பாதுகாப்பு, சமூக ஸ்திரத்தன்மை மற்றும் இலங்கை மக்களின் பாதுகாப்பையும் கடுமையாக அச்சுறுத்தலுக்கு உள்ளாக்குவதாக அமையும். அத்துடன் சீன நீதி மற்றும் சட்டக் கட்டமைப்பின் வளங்கள் வீணடிக்கப்படுவதற்கும் இது காரணமாகவிடும்.
சீன அரசாங்கம் எதிர்காலத்திலும் தனது உலகளாவிய பாதுகாப்பு முன்முயற்சி (Global Security Initiative) மற்றும் உலகளாவிய நாகரிக முன்முயற்சி (Global Civilization Initiative) ஆகியவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்துவதுடன் இலங்கையுடனான சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு மக்களின் உயிர், உடைமை மற்றும் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்து தூய்மையான, பாதுகாப்பான மற்றும் அழகான இலங்கையைக் கட்டியெழுப்ப பங்களிக்க முடியும் என சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
