.webp)
Colombo (News 1st) 2016 மார்ச் மாதம் இலங்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட பிணைமுறி விநியோகத்தின் போது அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனம்(Perpetual Treasuries Limited), முன்னாள மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன், முன்னாள் நிதியமைச்சர் ரவீ கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை முன்கொண்டு செல்ல முடியாதென கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் பிறப்பித்த உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று(01) இரத்து செய்தது.
அதற்கமைய பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பெர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டை முன்கொண்டு செல்வதில் எவ்வித தடையும் இல்லை என உயர் நீதிமன்றின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டை விசாரணை செய்த பின்னர், பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, உயர் நீதிமன்ற நீதியரசர்களான ஷிரான் குணரத்ன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியோரின் இணக்கப்பாட்டுடன் உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன இந்த தீர்ப்பை இன்று அறிவித்தார்.
2016 மார்ச் 31ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட பிணைமுறி விநியோகத்தின் போது, அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி பெர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனம், முன்னாள் நிதி அமைச்சர் ரவீ கருணாநாயக்க, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், பெர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர்களான அர்ஜுன் அலோசியஸ், ஜெப்ரி அலோசியஸ் உட்பட 10 பேரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு சட்ட மாஅதிபர் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
2021ஆம் ஆண்டில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை முன்வைத்த பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள், வழக்கின் ஒரு பிரதிவாதியாக பெர்பச்சுவல் ட்ரெஷர்ஸ் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளதாகவும் நிறுவனமொன்றுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டுசெல்ல முடியாதெனவும் சுட்டிக்காட்டியிருந்தனர்.
அதன் விளைவாக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் ஆரம்பக்கட்ட ஆட்சேபனைகளை எழுப்பி, ஏனைய பிரதிவாதிகளுக்கு எதிராகவும் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத் தெரிவித்திருந்தனர்.
இருதரப்பு சட்டத்தரணிகளும் முன்வைத்த விடையங்களை பரிசீலித்த மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம், 2021 டிசம்பர் 06ஆம் திகதி தனது கட்டளையை அறிவித்து, பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்ட ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொண்டிருந்தது.
பின்னர் பிரதிவாதிகளின் ஆரம்பக்கட்ட ஆட்சேபனையை ஏற்றுக்கொள்வதற்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் எடுத்த தீர்மானத்தை ஆட்சேபித்து சட்ட மாஅதிபரினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேன்முறையீட்டு நீதிமன்றம் அதனை நிராகரித்திருந்தது.
அதன் பின்னர் குறித்த தீர்ப்பை ஆட்சேபித்து சட்ட மாஅதிபர் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை சமர்ப்பித்தார்.
அந்த மேன்முறையீட்டை விசாரணை செய்த பின்னர், ஏனைய நீதிபதிகளின் உடன்பாட்டுடன் தீர்ப்பை அறிவித்த உயர் நீதிமன்ற நீதியரசர் மஹிந்த சமயவர்தன, தண்டனை சட்டக்கோவையின் 386ஆம் பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் 5(1) பிரிவின் கீழ், பிரதிவாதிகளுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு எவ்வித சட்டரீதியான தடையும் இல்லை என அறிவித்தார்.
பொருட்கோடல் கட்டளைச் சட்டத்தின் கீழ் நிறுவனமொன்று - நபரொருவர் என பொருட்கோடல் செய்யப்பட வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனிதர்களால் மட்டுமல்லாமல், நிறுவனக் கட்டமைப்புகள் மூலமாக நடத்தப்படும் இரகசியமான மற்றும் சிக்கலான நிதி மோசடிகள் மூலமாகவும் பொதுச் சொத்துக்களுக்கு கணிசமான இழப்பு ஏற்பபடுவதாக தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குற்றவியல் சட்டக்கோவையின் 450(5)(அ) பிரிவின் கீழ், கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இயன்றளவு துரிதமாக இந்த வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் எனவும் அந்த தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நினைவிருக்கிறதா?
கடந்த 11 ஆண்டுகள்?
மோசடி மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக நல்லாட்சியை கொண்டுவருவதாகக் கூறி 2015ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தவர்கள், சிங்கப்பூரிலிருந்து அர்ஜுன மகேந்திரனை அழைத்து வந்து மத்திய வங்கி ஆளுநராக நியமித்தனர்.
அமைச்சரவைக்குள்ளேயே இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு கிளம்பியது.
தனிப்பட்ட நெருக்கமே வெளிநாட்டவரொருவரை இந்த பதவிக்கு நியமிக்க ஒரே காரணமாக இருந்தது.
மகேந்திரன் 2015 ஜனவரியில் நியமிக்கப்பட்டார்.
நியமனம் பெற்ற சில வாரங்களிலேயே 2015 பெப்ரவரி 27ஆம் திகதி பாரிய பிணைமுறி மோசடி இடம்பெற்றது.
மத்திய வங்கியின் உள்ளக தீர்மானங்களைத் தனது உறவினர்களுக்கு வழங்கி, நாட்டிற்கு நட்டம் ஏற்படுத்தும் வகையில் பிணைமுறிகளை விநியோகித்தமை அவர் மீதான குற்றச்சாட்டாகும்.
கணக்காய்வாளர் நாயகத்தின் தடயவியல் கணக்காய்வு அறிக்கையின் பிரகாரம் ஊழியர் சேமலாப நிதியத்திற்கு மாத்திரம் ஏற்பட்ட நட்டம் 9 பில்லியன் ரூபாவாகும்.
தற்போது 11 வருடங்கள் கடந்துவிட்டன.
நினைவிருக்கிறதா?
2016 மார்ச் மாதத்திலும் இதே போன்றதொரு பிணைமுறி மோசடி இடம்பெற்றது.
அதன் நட்டமும் இதுவரை கணக்கிடப்படவில்லை.
2015 ஜூலை 14ஆம் திகதி அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்த கருத்தின் பிரகாரம் முதலாவது பிணைமுறி மோசடியின் மூலம் 590,000 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டிருந்தது.
இதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.
சாட்சி விசாரணை நடைபெற்றது.
ஆனால் அந்த அறிக்கை தற்போது தேசிய சுவடிகள் திணைக்களத்திலேயே உள்ளது.
அதனை 2048ஆம் ஆண்டிலேயே பார்க்க வேண்டியேற்படும்..
நினைவிருக்கிறதா?
பிணைமுறிகள் மோசடி தொடர்பாக பாரதூரமான தீர்மானங்களை எடுக்க ஆலோசனை வழங்கியது யார் என்பதை அர்ஜுன மகேந்திரன் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் கூறியிருந்தார்.
அந்த குழுக்களின் அறிக்கைகள் வௌியாகுவதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து, அறிக்கையில் அடிக்குறிப்புகளை இட்டு தகவல்களைக் குழப்பியவர்கள் யார் என்பது நாட்டு மக்களுக்கு தெரியாத விடயமல்ல.
தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் மகேந்திரன் நாட்டை விட்டு வெளியேறிய போது, அவர் திருமண விழாவிற்கு சென்றதாகக் கூறி அவரை பாதுகாத்தது யார் என்பதும் மக்களுக்கு தெரியும்.
முன்னாள் ஜனாதிபதியொருவர் 21,000-இற்கும் மேற்பட்ட கையெழுத்துகளை இட்டும் மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவர முடியாமல் போனது.
தற்போது பிணைமுறி கொடுக்கல் - வாங்கல்கள் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
மகேந்திரனுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது சர்வதேச பொலிஸாருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் இன்னும் சுதந்திரமாகவே உள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தில் தீர்மானம் எடுக்கும் பிரதான நிறுவனமான மத்திய வங்கியின் உயர் பதவிகளில் இருந்தவர்கள் நாட்டிற்கு செய்த வினை இதுதான்.
அன்று ஆட்சியைப் பொறுப்பேற்ற பிரதமர், அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் பாராளுமன்றத்தில் வழங்கிய உறுதிமொழிக்கு என்ன நடந்தது?
இவர்கள் யாருடைய தேவைக்காக இவற்றை செய்தார்கள்?
இந்த தீர்மானங்களை எடுக்கத் தூண்டியவர்கள் மற்றும் அவர்களைப் பாதுகாத்தவர்கள் யார் என்பதை மக்கள் அறிவார்கள்.
தற்போது மக்கள் சட்ட நடவடிக்கைக்காகக் காத்திருக்கிறார்கள்.
கவனத்திற்கு..
