695 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு IMF அனுமதி

இலங்கைக்கான 695 மில்லியன் டொலர் கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

by Staff Writer 28-05-2026 | 8:01 AM

Colombo (News 1st) இலங்கைக்கான 695 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதிக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின்  நிறைவேற்று சபை கூட்டம் நேற்று(27) நடைபெற்றது.

இரு மீளாய்வுகளுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதால் சர்வதேச நாணய நிதியத்தின் 05 மற்றும் 06ஆவது கடன் தவணைகளைப் பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

அதற்கமைய, 2023 மார்ச் மாதம் ஆரம்பமாகிய 48 மாத கால நீடிக்கப்பட்ட கடன் வசதி திட்டத்தினூடாக இலங்கைக்கு இதுவரை 2.4 பில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துதல், பொது நிதியை வலுப்படுத்துதல், வெளிநாட்டு கையிருப்பை மீள கட்டியெழுப்புதல் மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை முன்னோக்கி கொண்டுசெல்லுதல் ஆகியன நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

இறக்குமதி கட்டுப்பாடுகளை தவிர்ப்பது உள்ளிட்ட சில குறிப்பிட்ட அளவுகோல்களை மாத்திரம் இலங்கை பூர்த்தி செய்ய தவறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

எவ்வாறாயினும், வீழ்ச்சியை சந்திக்கக்கூடிய துறைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதுடன் மின்சாரம் - எரிபொருளுக்கான செலவுகளை ஈடுசெய்யக்கூடிய விலை நிர்ணய வழிமுறைகளை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் மற்றும் நிதி உத்தரவாதங்கள் உள்ளிட்ட விடயங்களை இலங்கை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை தெரிவித்துள்ளது.