.webp)

Colombo (News 1st) 2022ஆம் ஆண்டு காலிமுகத் திடல் 'கோட்டா கோ கம' போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் தேஷபந்து தென்னகோனை சந்தேகநபராக பெயரிடுமாறு சட்ட மாஅதிபரினால் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தை வலுவற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்ட மாஅதிபர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த மனு A.H.M.D.நவாஸ், அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று(25) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத், பிரதிவாதியான தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுப்பதாக நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இதன்போது மூவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தின் தலைவர் நீதியரசர் நவாஸ், குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்வதற்கு தேவைப்படும் கால அவகாசம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒருமாத காலத்திற்குள் தேஷபந்து தென்னகோனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி சொலிசிட்டர் ஜெனரல் இதற்கு பதிலளித்தார்.
தேஷபந்து தென்னகோன் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கும் போது, தனது தரப்பினருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் இந்த வழக்கை தொடர்ந்து நடத்திச்செல்வது வலுவற்றது என தெரிவித்தார்.
முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், இந்த மனுவை எதிர்வரும் செப்டம்பர் 02ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டது.
