இந்தியாவினால் இலங்கைக்கு 134 கெப் வாகனங்கள்

இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸாருக்கு 134 கெப் வாகனங்கள்

by Staff Writer 25-05-2026 | 4:52 PM

Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று(25) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

இதற்கான நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இந்திய - இலங்கை நட்புறவு திட்டத்தின் கீழ் இந்த வாகனங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

இந்திய அரசு 300 மில்லியன் ரூபா செலவில் வழங்கியுள்ள இந்த வாகனங்கள் வட மாகாண பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்படவுள்ளன.

இந்த நன்கொடையை பாராட்டி பொலிஸ் மாஅதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது கூறியுள்ளார்.