.webp)

Colombo (News1st) இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான சுங்க இறக்குமதி வரியின் மீது 50 வீத மேலதிக வரியை இன்று முதல் விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிவித்தலுக்கமைய இன்று(16) முதல் 3 மாத காலப்பகுதிக்கு இந்த 50 சதவீத மேலதிக வரி அறவிடப்படவுள்ளது.
எவ்வாறாயினும், மே 15 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நாணயக் கடிதங்கள் திறக்கப்பட்ட வாகனங்களுக்கு குறித்த புதிய 50 வீத சுங்க வரி தாக்கம் செலுத்தாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மோட்டார் வாகனங்களுக்கு இதுவரை அறவிடப்பட்ட 30 சதவீத சுங்க இறக்குமதி வரியின் மீது மேலும் 50 சதவீத மேலதிக வரி விதிக்கப்படவுள்ளது.
பொது வரி மற்றும் முன்னுரிமை வரியின் அடிப்படையில் 50 சதவீத இறக்குமதி வைப்புத் தொகையைச் செலுத்த வேண்டும்.
பயணிகள் போக்குவரத்து மோட்டார் வாகனங்கள், பஸ்கள், ஜீப் வண்டிகள், வேன்கள், சரக்கு போக்குவரத்து வாகனங்கள், அம்பியூலன்ஸ்கள், மோட்டார் கார்கள் மற்றும் நில வாகனங்களுக்கும் இந்த மேலதிக வரி உரித்தாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹைபிரிட் வாகன வகையின் கீழுள்ள முழுமையான மின்சார வாகனங்கள் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களுக்கும் இந்த மேலதிக வரி அமுலாகும் எனவும் இலங்கை சுங்கம் குறிப்பிட்டுள்ளது.
மேலதிக வரியை 3 மாத காலத்திற்கு மாத்திரம் நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு காரணங்கள் செல்வாக்கு செலுத்தியுள்ளதாக நிதி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணய மாற்று விகிதத்தின் மீது ஏற்படும் அவசியமற்ற அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதும், கையிருப்பைக் கட்டியெழுப்புவதுமே இந்தத் தீர்மானத்தின் நோக்கங்கள் என அமைச்சர் அனில் ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் வாகனங்களின் விலைகள் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவித்த அந்த சங்கத்தின் உபதலைவர் அரோஷ் ரொற்றிகோ தெரிவித்துள்ளார்.
