.webp)

Colombo (News 1st) தெனியாயவில் பரவிய வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்துவதற்காக நீர்மூலங்களை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.
தற்போது இந்த நோய் வேகமாகப் பரவும் அபாயம் இல்லை என பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பொதுமக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.
இதனிடையே, பரவிய வைரஸ் காய்ச்சல் தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கவுள்ளதாக தென்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் என்.ஜி.எஸ் பண்டிதரத்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் குழுவொன்று நேற்று(09) தெனியாய பகுதிக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்ததாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்களின் உயிரியல் மாதிரிகளை கராபிட்டிய வைத்தியசாலைக்கு அனுப்பி மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளுக்கு அமைய இது மனித உடலின் உணவுப் பாதையை அண்மித்து பெருமளவில் காணப்படும் ஒரு வகை வைரஸ் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதானமாக அசுத்தமான நீர் அல்லது உணவின் ஊடாகவே இந்த வைரஸ் உடலுக்குள் நுழைவதாகவும் தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பரவிவரும் வைரஸ் காய்ச்சல் காரணமாக மூடப்பட்ட தெனியாய கல்வி வலயத்தின் பாடசாலைகள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் திங்கட்கிழமை தென் மாகாண ஆளுநர் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்றும் நேற்றுமுன்தினமும் தெனியாய தேசிய பாடசாலை, தெனியாய புனித மத்தேயு பாடசாலை, தெனியாய ராஜபக்ஸ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
