நுவரெலியாவில் கம்மெத்த Re-Build வேலைத்திட்டம்

நுவரெலியாவில் 2ஆவது நாளாக முன்​னெடுக்கப்பட்ட கம்மெத்த Re-Build வேலைத்திட்டம்

by Staff Writer 08-05-2026 | 8:41 PM

Colombo (News 1st) டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கம்மெத்த Re-Build வேலைத்திட்டம் நுவரெலியாவில் இன்று(08) 2ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை, தொழிநுட்ப கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம் ஆகியன கம்மெத்தவுடன் ஒன்றிணைந்து அவுஸ்திரேலியாவை தளமாக கொண்ட மின்டெரூ அறக்கட்டளையின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றன.

எமது மக்களுக்கு சக்தியாக விளங்கும் வகையில், டித்வா புயல் ஏற்பட்டு 24 மணித்தியாலங்கள் கடப்பதற்கு முன்னர் சக்தி - சிரச நிவாரண யாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

அதனூடாக, பல நாட்களாக அவசர நிவாரண சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் கட்டியெழுப்புவதே இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக அமைந்தது.

அதற்காக, அவுஸ்ரேலியாவின் மின்டெரூ அறக்கட்டளையின் பங்களிப்புடன் 'கம்மெத்த கெயார் அன்ட் டெயார்' ஆரம்பிக்கப்பட்டது.

கொத்மலையில் ஆரம்பமான கம்மெத்த கெயார் அன்ட் டெயார் நடவடிக்கை, மீண்டெழும் மக்களுக்கு வலுசேர்க்கும் வகையில் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி முன்னெடுக்கப்பட்டது.

டிட்வா புயலின் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பப்படும் நாட்டிற்காக, கம்மெத்த செயற்படுத்தும் மூன்றாவது நடவடிக்கையே கம்மெத்த Re-Build வேலைத்திட்டமாகும்.

பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், அவர்களின் தொழில்சார் திறன்களை மேம்படுத்தும் வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நுவரெலியா தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் கட்டுமானத் தொழில், தச்சுத் தொழில், மின்சாரம், உலோக வேலைகள், குழாய் பொருத்துதல் மற்றும் ஆடை வடிவமைப்பு போன்ற பல்வேறு துறைகளில் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கான விசேட பயிற்சி வேலைத்திட்டங்கள் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

நேற்று பயிற்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் தொழில்துறை உபகரணத் தொகுப்புகளை வழங்கும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது.  

இதனிடையே, டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளும் இதன்போது நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன.